/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விபத்தை தடுக்க கம்பு வாயிலாக முட்டு
/
மின்விபத்தை தடுக்க கம்பு வாயிலாக முட்டு
ADDED : மே 30, 2024 12:10 AM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை, ஏ.பி., சத்திரம் என அழைக்கப்படும் அருணாசலபிள்ளைசத்திரம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போதும், காற்றடிக்கும்போது ஒன்றொடொன்று உரசி மின்விபத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க, தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை தாங்கிப்பிடிக்க கான்கிரீட் மின்கம்பம் அமைக்க வேண்டி இருந்தது.
அதையடுத்து, உத்திரமேரூர் மின்வாரிய அதிகாரிகள், சவுக்கு கம்பு வாயிலாக முட்டு கொடுத்துள்ளனர். இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போதோ, அவ்வழியாக செல்லும் கனரக வாகனம் லேசாக கம்பின் மீது உரசினால், சவுக்கு கம்பு உடைந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, முட்டு கொடுத்துள்ள சவுக்கு கம்பை அகற்றிவிட்டு, கான்கிரீட் மின்கம்பம் அமைத்து, தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை சீரமைக்க உத்திரமேரூர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.