ADDED : ஏப் 11, 2024 11:30 PM

செங்கல்பட்டு:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 1ம் தேதி முதல், 'பூத் சிலிப்' வழங்கும் பணி துவங்கியது. பூத் சிலிப் முதலில் அரசியல் கட்சியினர் வாயிலாக வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.
இதில், குளறுபடிகள்இருப்பதால், அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கக்கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இத்தேர்தலில் தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த ஏழு தொகுதிகளில், 13,20,132 லட்சம் ஆண் வாக்காளர்கள், 13,46,402 லட்சம் பெண் வாக்களர்கள், 464 இதர பிரிவினர் என, மொத்தம் 26,66,998 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2,825 ஓட்டுச்சாவடி மையங்களில், 2,795 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர்.
வண்டலுார் தாலுகாவில், ஊரப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், பூத் சிலிப் வழங்கும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவரும், கலெக்டருமான அருண்ராஜ் துவக்கி வைத்தார்.
இந்த பூத் சிலிப்பில், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள தேதி, ஓட்டுப்பதிவுக்கான நேரம், வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளரின் அடையாள அட்டை எண், எந்த ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டுப்போட வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 10ம் தேதி வரை 15,27,290 வாக்காளர்களுக்கு, வீடுகள்தோறும் சென்று, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் பூத் சிலிப் வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13,45,725 வாக்காளர்கள் உள்ளனர். பூத் சிலிப் வழங்கும் பணியில் 1,398 பேர் பணியில் ஈடுபட்டு, கடந்த 10ம் தேதி வரை, 8,64,007 பேருக்கு வழங்கி உள்ளனர்.
