/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணி குழிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணி குழிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணி குழிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணி குழிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : ஆக 22, 2024 01:09 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாய் மீது, 40 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக ஆனந்தாபேட்டையில் திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் பக்கவாட்டு சுவர் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு வாரத்திற்கு முன், காஞ்சிபுரத்தில் பெய்த பலத்த மழையால், ஆனந்தாபேட்டையில், மஞ்சள்நீர் கால்வாயின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் நிரம்பியது.
இதனால், இரு வாரமாக கட்டுமான பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், கட்டுமான பணிக்கான கம்பிகளும் துருப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கட்டுமான பணிக்காக குழி தோண்டிய இடத்தில் தேங்கிய மழைநீரை, மோட்டார் வாயிலாக வெளியேற்றும் பணி இரு நாட்களாக நடந்து வருகிறது. 'மழைநீரை முற்றிலும் அகற்றியபின், கட்டுமான பணி தொடரும்' என, மாநகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.