ADDED : அக் 21, 2025 11:41 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்டோபர் மாதம் துவங்கியது முதல், தற்போது வரை 10 மாடுகள் மழை, இடி, மின்னல் தாக்கி, மின் சாரம் பாய்ந்து ஆகிய காரணங்களால் இறந்துள்ளன.
உத்திரமேரூர் பேரூராட்சி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர்கள் முருகன், 29; ரமேஷ், 29. இருவரும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மேய்ச்சல் நிலத்தில், இவர்களின் இரண்டு பசு மாடுகள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், உத்திரமேரூரில் பிற்பகல், 12:30 மணிக்கு காற்றுடன்கூடிய பலத்த மழை பெய்தபோது, மின்கம்பம் சாய்ந்ததில், மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த பசு மாடுகள் மீது மின் கம்பிகள் விழுந்தன. அதில், இரண்டு பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன் மகன்கள் சுகுமார், கோபி ஆகிய இருவருக்கு சொந்தமான ஐந்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளை நேற்று மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர்.
வேளியூர் தனியார் தொழிற்சாலை அருகே, மின் வழித்தடத்தின் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மூன்று கறவை மாடுகள் பரிதாபமாக இறந்தன. மூன்று மாடுகளும் கன்று போட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை.
பால் கறந்துக்கொண்டிருந்த மாடுகள் இறந்ததும், தாயை இழந்தை கன்றுகுட்டிகளின் தவிப்பு எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, நேற்று இரவு 6:30 மணி அளவில் மின் இணைப்பு துண்டித்தனர்.
இவற்றையும் சேர்த்து இம்மாதத்தில் இதுவரை, 10 மாடுகள் உயிரிழந்துள்ளன. மழையில் ஓட்டு வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது.