/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஓரிக்கையினர் துாங்க முடியாமல் அவதி
/
10 மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஓரிக்கையினர் துாங்க முடியாமல் அவதி
10 மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஓரிக்கையினர் துாங்க முடியாமல் அவதி
10 மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஓரிக்கையினர் துாங்க முடியாமல் அவதி
ADDED : ஜூலை 19, 2025 10:56 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட ஓரிக்கையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல், நேற்று காலை 10:30 மணி வரை என, 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதிவாசிகள் இரவு முழுதும் துாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டுக்கு உட்பட்ட ஓரிக்கை அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு, அப்பாவு நகர், கஸ்துாரிபாய் நகர், காந்தி நகர், நேரு நகர், பழைய காலனி, ஜோய் காலனி, ஓரிக்கை மஹா பெரியவா மணிமண்டபம், உள்ளிட்ட பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, நேற்று காலை 10:30 மணிக்கு சீரானது. தொடர்ந்து 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் ஓரிக்கை பகுதியினர் நேற்று முன்தினம் இரவு முழுதும் துாங்க முடியாமல் கொசு கடிக்கு ஆளாகி அவதிப்பட்டனர்.
இரவு முழுதும் துாங்காததால் பலர் நேற்று பணிக்கு செல்லவில்லை. மின்மோட்டாரை இயக்கி டேங்கில் தண்ணீர் நிரப்ப முடியாததால், வீட்டில் உள்ள ஒருவரும் குளிக்கவில்லை. சமையலுக்கு சட்னி, மசாலா அரைக்க முடியவில்லை.
எனவே, மின் தடை ஏற்படாமல் இருக்கவும், மின்தடை ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஓரிக்கை மின் பிரிவு உதவி பொறியாளர் சோழராஜன் கூறியதாவது:
ஓரிக்கையில், நள்ளிரவு மின்தடை ஏற்பட்டவுடன், எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என, கொட்டும் மழையிலும் ஆய்வு செய்தோம். கம்பத்திலும், மின்மாற்றியிலும் எந்தவித பழுதும் ஏற்படவில்லை.
இருப்பினும், மின் இணைப்பு வழங்கினால் உடனே மின்மாற்றியில் துண்டிப்பு ஏற்படுகிறது. அதன்பின், எங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய புதைவட மின்தட பாதையில் ஆய்வு செய்தோம்.
அப்போது, நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள கேபிளில் பழுது ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தோம்.
தொடர்ந்து, மின் ஊழியர்கள் வீட்டிற்குகூட செல்லாமலும், காலை உணவை சாப்பிடாமலும், தொடர்ந்து நான்கு மணி நேரம் பணிபுரிந்து பழுதடைந்த கேபிளை சரி செய்து மின் இணைப்பு வழங்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.