/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால் எடமச்சியில் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
/
கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால் எடமச்சியில் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால் எடமச்சியில் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால் எடமச்சியில் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
ADDED : ஜூன் 04, 2025 01:30 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்கு, கடந்த நவரை பருவத்தில், 2,500 ஏக்கர் பரப்பளவில், நெற்பயிர் நடவு செய்திருந்தனர். இந்த நெல்லை, ஒரு மாதத்திற்கு முன் அறுவடை செய்த விவசாயிகள், அங்குள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தனர்.
இதேபோல, அருகிலுள்ள பொற்பந்தல், சின்னாலம்பாடி, கணபதிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர்.
தற்போது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 10,000 நெல் மூட்டைகள் உள்ளன. இந்த நெல் மூட்டைகளை, உத்திரமேரூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு செல்ல, குறித்த நேரத்திற்கு லாரிகள் வரவில்லை.
இதனால், நெல் மூட்டைகள், 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையத்திலேயே இருக்கின்றன. கடந்த வாரம் பெய்த மழையினால், சில நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
இந்த கொள்முதல் நிலையத்தில் போதிய கிடங்கு வசதி இல்லாததால், நெல் மூட்டைகள் வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் திடீரென்று மழை பெய்தால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, அரசுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, எடமிச்சி நேரடி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, லாரிகள் வாயிலாக உத்திரமேரூர் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரிகள் வரவில்லை. இதனால், கொள்முதல் நிலையத்திலேயே நெல் மூட்டைகளை வைக்க வேண்டிய சூழல் உள்ளது.
நெல் மூட்டைகளை இங்கிருந்து, உத்திரமேரூர் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.