/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கச்சபேஸ்வரர்
/
1,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கச்சபேஸ்வரர்
UPDATED : ஜன 31, 2024 07:16 PM
ADDED : ஜன 31, 2024 07:12 PM
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். தண்டியலங்காரம் என்ற 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நுாலில் இத்திருக்கோவிலை குறித்து கீழ்குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரிடைவெண்பா பாடல்
நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்
நுாலணிந்த மார்பன் நுதல்விழியன் - தோலுடையன்
கைம்மான் மறியன் கனல்மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க் கிறை
என்பது அந்நுாலில் காட்டப்பட்ட மேற்கோள் பாடலாகும். இதனால், இத்தலத்தின் பழமையை அறியலாம்.
கச்சபேஸ்வரர் என பெயர் வர காரணம்:
பிரம்மகற்பத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுது பெறுவதற்காக மந்தர மலையை மத்தாக இட்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலினுள் அமிழ்ந்த மந்தர மலையை திருமால் ஆமை வடிவம் கொண்டு தன் முதுகில் தாங்கி நிறுத்தி அமுதம் கிடைக்க வழி செய்தார்.
இதனால், செருக்குற்ற திருமால் உலகம் அஞ்சும்படி அக்கடல் முழுதும் திரிந்து கலக்கினார். அதனால், அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை தஞ்சமடைய, அவர் கருணையால் அவ்விடம் சென்று அந்த ஆமையை அழித்து, அதன் ஓட்டினை தமது மார்பில் அணிந்திருக்கும் வெண்டலைமாலையின் நடுவில் கோர்த்து அணிந்து கொண்டார்.
ஆணவம் அழிந்த திருமால், தாம் செய்த குற்றம் நீங்க இச்சோதிலிங்கத்தை வழிபட்டார். அதன் வாயிலாக நீங்காத சிவபக்தியும், வைகுந்த பதவியின் தலைமையும் தாம் பூசித்த லிங்கம் அன்று முதல், கச்சபேசம் (கச்சபம் = ஆமை) என்று பெயர் பெறவும், இத்தலம் காசியினும் உயர்தகுதி பெற்று விளங்கவும் வரம் பெற்றார்.
இதனால், திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால், இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் என பெயர் வந்தது.
கச்சபேஸ்வர பெருமானை வழிபட நினைத்தோர், வழிபட சென்றோர், வழிபட்டோர், யாவரும் இவ்வுலகில் துன்பம் நீங்கி முடிவில் முத்தியும் பெறுவர்.
'கச்சபேசன் தனைக் கும்பிடச் சென்றவர் கண்டவர்,
கருதினர் யாவரும் மாறிலா முத்திபெற்று உய்வர்'
என, காஞ்சி புராணம் இதை விளக்கி கூறுகிறது.
இஷ்டசித்தி தீர்த்த -குளம்
இஷ்டசித்தீசத்தின் அருகில் உள்ளது. இஷ்ட சித்தி தீர்த்தம் ஆமாகும். இத்தீர்த்தத்தில் நீராடி அருகில் உள்ள இஷ்டசித்தீசப் பெருமானை வணங்கி மிருதசஞ்சீவினி என்னும் இறந்தவரை எழுப்பும் மந்திரத்தைச் சுக்கிரன் பெற்றான். அதில் மூழ்கியவர்களுக்கு சிவபெருமான் திருவருள் முழுமையாகக் கிடைப்பதுடன், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பயன் நான்கும் கிடைப்பது உறுதி.
எல்லா நாட்களிலும் நீராடுவதற்குரிய தீர்த்தம் இதுவானாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூழ்குவது பெரும் பயனைத் தரும். அதிலும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது மேலும் பெரும்பயன் தருவதாகும்.
இத்தீர்த்தத்தில் கிரேதாயுகத்தில் பிரம்மன் சரசுவதியுடன் மூழ்கி, படைத்தல் தொழிலும், சத்தியலோக வாழ்வும் பெற்றான். திரதாயுகத்தில் சூரியன் மூழ்கி வேத உருவமான உடலையும் ஆயிரம் கதிர்களையும் பெற்றான்.
துவாபரயுகத்தில் திருமால் இலக்குமியுடன் மூழ்கி காத்தல் தொழிலும், வைகுந்த வாழ்வும் பெற்றார். கலியுகத்தில் இறைவியார் மூழ்கி, திருவேகம்பர் திருமேனியில் பாதியாகக் கலந்தார்.
குபேரன் மூழ்கி இழந்த கண்ணைப் பெற்றதுடன், இறைவனுக்குத் தோழனாகவும் ஆனான். துச்சுருமேனன் முழ்கி ஊர்வசியின் இன்பம் பெற்றான்.
சாம்பன் என்பவன் மூழ்கி குட்டநோய் தீர்ந்தான். நளனும், பாண்டவர்களும் மூழ்கித் தம் பகைவர்களை வென்று அரசாட்சியை அடைந்தனர்.
மாவிளக்கு பரிகாரம்
காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ளஇஷ்டசித்தி தீர்த்தத்தில், கார்த்திகை மாதத்தில் நீராடி, புது மண் சட்டியில் பச்சரிசி மாவை, வெல்லம் கலந்து பிசைந்து, அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தேங்காய், பூ, பழம் முதலியவற்றை அந்த மாவில் வைத்து, தலையில் சும்மாடு வைத்து சட்டி தாங்கிக்கொண்டு கோவிலை வலம் வருவர்.
இதனால், தலைவலி, காது வலி, காதில்சீழ் வடிதல், தலைக்குத்து போன்றவை நீங்கி இன்பம் பெறுவது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதனால், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும், மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
15டன் எடையில் இரு யானை கற்சிலைகள்
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணியில் ஒரு பகுதியாக, கோவில் நுழைவாயிலில், ஒவ்வொன்றும் 15 டன் எடையில், இரண்டு யானை கற்சிலைகள் அமைக்க திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான சிற்பிகள், அழகிய வேலைப்பாடுடன் கூடிய இரு யானை கற்சிலைகளை செதுக்கினர்.
இரு யானை சிலைகளும் கோவில் நுழைவாயில் பகுதியில் ஜன., 21ல் நிறுவப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், நுழைவாயிலில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இரு யானை கற்சிலைகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.