/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: அதிகபட்சமாக ஆலந்துார் தொகுதியில் 1.32 லட்சம் பேர்
/
காஞ்சி மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: அதிகபட்சமாக ஆலந்துார் தொகுதியில் 1.32 லட்சம் பேர்
காஞ்சி மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: அதிகபட்சமாக ஆலந்துார் தொகுதியில் 1.32 லட்சம் பேர்
காஞ்சி மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: அதிகபட்சமாக ஆலந்துார் தொகுதியில் 1.32 லட்சம் பேர்
ADDED : டிச 20, 2025 05:28 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 2.74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் துவங்கின.
வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் டிச., 14ம் தேதி வரை வழங்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது; 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று மதியம் 3:00 மணிக்கு, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலை, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நான்கு சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.
மாவட்டத்தில் இரட்டை பதிவு, விண்ணப்பங்களை திரும்ப வழங்காதது, இறந்தவர்கள் பெயர், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் போன்ற பல காரணங்களால், வாக்காளர்கள் 2.74 லட்சம் பேர் நீக்கப்பட் டதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மாவட்டம் முழுதும், இறந்தவர்கள் 57,658 பேரும், இரட்டை பதிவு 10,719 பேரும், இடம் பெயர்ந்தவர்கள் 1,46,621 பேரும், கண்டறிய முடியாதவர்கள் 58,675 பேரும், பிற வகையில் 601 பேரும் என, மொத்தம் 2.74 லட்சம் பேர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் என, நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 14.01 லட்சம் பேர் கடந்த அக்டோபரில் இருந்த நிலையில், தற்போது 2.74 லட்சம் பேர் நீக்கப்படுவதால், 11.26 லட்சம் பேருடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகள் பற்றி, வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஜன., 18 வரை மனு அளிக்கலாம்.
வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவைக்கும் விண்ணப்பங்களை நேரிலும் அல்லது Voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

