/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
274 ஊராட்சிகளுக்கு மத்திய நிதிக்குழு மானியம் ரூ.39.65 கோடி! 2,140 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாகம் அனுமதி
/
274 ஊராட்சிகளுக்கு மத்திய நிதிக்குழு மானியம் ரூ.39.65 கோடி! 2,140 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாகம் அனுமதி
274 ஊராட்சிகளுக்கு மத்திய நிதிக்குழு மானியம் ரூ.39.65 கோடி! 2,140 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாகம் அனுமதி
274 ஊராட்சிகளுக்கு மத்திய நிதிக்குழு மானியம் ரூ.39.65 கோடி! 2,140 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாகம் அனுமதி
ADDED : ஆக 12, 2024 04:21 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 39.65 கோடி ரூபாய் மத்திய நிதிக்குழு மானியம் நிதி ஒதுக்கீடு செய்து, 2,140 வளர்ச்சி பணிகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இந்த வளர்ச்சி பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்ப, மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியம் என, தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இந்த நிதியை பயன்படுத்தி, சாலைகள், குடிநீர் பணிகள் மற்றும் சுகாதார தடுப்பு பணிகள் என, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு, ஊராட்சி நிர்வாகங்கள் பயன்படுத்தி வருகின்றன.
உதாரணமாக, மாநில நிதிக்குழு மானிய நிதியை பயன்படுத்தி, ஊராட்சி குடிநீர், தெரு விளக்கு, சுகாதார பணிகள், ஊராட்சி பணியாளர்களின் ஊதியம் என, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல், மத்திய நிதிக்குழு மானியம், சாலைகள், குடிநீர் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
நடப்பு 2024 - -25ம் நிதி ஆண்டிற்கு, 274 ஊராட்சிகளுக்கு மத்திய நிதிக்குழு மானியம், 32.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 262 பணிகளுக்கு, 4.54 கோடி ரூபாய். உத்திரமேரூர் ஒன்றியத்தில், 404 பணிகளுக்கு, 5.01 கோடி ரூபாய். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு, 628 பணிகளுக்கு, 6.08 கோடி ரூபாய்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 299 பணிகளுக்கு, 4.63 கோடி ரூபாய்.
குன்றத்துார் ஒன்றியத்தில் 412 பணிகளுக்கு, 11.92 கோடி ரூபாய் மற்றும் ஐந்து வட்டார வளர்ச்சி நிர்வாகங்களுக்கு, 135 பணிகளுக்கு, 7.47 கோடி ரூபாய் என, மொத்தம் 2,140 பணிகளுக்கு, 39.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வளர்ச்சி பணிகளை, நிர்வாக அனுமதி அளித்து ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.