/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டத்தில் 292 பேர் மனு
/
குறைதீர் கூட்டத்தில் 292 பேர் மனு
ADDED : நவ 06, 2024 12:52 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், பட்டா கேட்டும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரியும், வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை வசதி கேட்டு என, 292 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் அறிவுரை கையேடுகளை வழங்கினார்.
மேலும், வல்லம் கிராமத்தில் பாம்பு கடித்து இறந்த மணிமேகலை என்பவரது குடும்பத்திற்கு, 1 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான மரத்தை சிலர் அத்துமீறி வெட்டியதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச் செயலர் எல்லப்பன் என்பவர், மனு அளித்திருந்தார்.
அவரது மனுவில், 'சின்ன காஞ்சிபுரம் குறுக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான மரத்தை சிலர் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
'மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர், பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
'தாசில்தாரிடம் புகார் அளித்தேன். அவர் மாநகராட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார். சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் ஆர்த்தி, சப்-கலெக்டர் ஆஷிக்அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.