/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூரை சேதமான 300 பஸ்கள் மழையின் போது நிறுத்தம்
/
கூரை சேதமான 300 பஸ்கள் மழையின் போது நிறுத்தம்
ADDED : டிச 05, 2024 01:58 AM
சென்னை,
கூரை சேதமடைந்த, 300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகள் மழையின் போது நிறுத்தி வைக்கப்படுவதால், சொகுசு கட்டண பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சாதாரண கட்டணத்தில் இயக்கப்படும், 1,300க்கும் மேற்பட்ட பேருந்துகளில், 30 சதவீதம் பழைய பேருந்துகள். பழைய பேருந்துகளில், தொழில்நுட்ப கோளாறு, கூரை சேதமடைந்த பேருந்துகள்உள்ளன.
இவ்வாறு, 300 சாதாரண கட்டண பேருந்துகள் மழை பெய்யும் போதெல்லாம், நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், அந்த தடங்களில் சொகுசு பேருந்துகள் அதிகரித்து இயக்கப்படுகின்றன.
பயணியர் கூறியதாவது:
மழை பெய்யும் போதெல்லாம், சாதாரண கட்டணபேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. சொகுசு கட்டண சிவப்பு நிற பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. இதனால், கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:
மழையின் போது பயணியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மேலும், கூரை சேதமடைந்த பேருந்துகளை இயக்கினால், மழைநீர் ஒழுகுவதாக புகார்கள் வரும். இதை தவிர்க்க, கூரை சேதமடைந்த பேருந்துகளை நிறுத்த நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.