/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாவட்டத்தில் ஆண்டிற்கு 300 பேர்... மாயம்!:ஓடிப்போன பெண்களை தேடிப்பிடிக்க சிரமம்
/
காஞ்சி மாவட்டத்தில் ஆண்டிற்கு 300 பேர்... மாயம்!:ஓடிப்போன பெண்களை தேடிப்பிடிக்க சிரமம்
காஞ்சி மாவட்டத்தில் ஆண்டிற்கு 300 பேர்... மாயம்!:ஓடிப்போன பெண்களை தேடிப்பிடிக்க சிரமம்
காஞ்சி மாவட்டத்தில் ஆண்டிற்கு 300 பேர்... மாயம்!:ஓடிப்போன பெண்களை தேடிப்பிடிக்க சிரமம்
ADDED : பிப் 16, 2024 10:21 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளம்பெண்கள், ஆண்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் என பல தரப்பினரும் பல்வேறு காரணங்களால் காணாமல் போகின்றனர். ஆண்டிற்கு, சராசரியாக 300 பேர் மாயமாவதாக போலீசில் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு தேவை என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் என இரு காவல் கோட்டங்கள் உள்ளன. இதில், காஞ்சிபுரம் காவல் கோட்டத்தின் கட்டுப்பாட்டில், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, பாலுசெட்டிச்சத்திரம், காஞ்சிபுரம் தாலுகா, வாலாஜாபாத், மாகரல், உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் காவல் துணை கோட்டத்தின் கட்டுப்பாட்டில், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலையங்களில், வாகன விபத்து, திருட்டு, கொலை மற்றும் கொலை முயற்சி, மாயம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், வாகன விபத்துகளின் எண்ணிக்கை எப்போதும் கணிசமாக இருக்கும்.
இதையடுத்து, காணாமல் போனவர்களின் வழக்குகள் தான் அதிகமாக பதிவாகின்றன. இதில், போலீசார் தேடி பிடித்து, சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் காணாமல் போன நபர்களை ஒப்படைக்கும் போது, பல்வேறு அறிவுரைகளை கூறி வழி அனுப்பி வைக்கிறது.
குறிப்பாக, கணவரை விட்டு பிரிந்து மாயமாகும் பெண்கள் மற்றும் டீன் ஏஜ் என, அழைக்கப்படும் விடலைப் பருவத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தமாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022ம் ஆண்டு 295 பேர் பல்வேறு காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணவில்லை.
2023ம் ஆண்டு, 298 நபர்கள் காணவில்லை என, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 262 நபர்களை மீட்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு, 71 பெண்களும் காணவில்லை என குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குகளில், மாயமான நபரின் உறவினரின் உதவியுடன் போலீசாரே, 66 நபர்களை மீட்டு உரிய புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
நடப்பாண்டில், நேற்று முன்தினம் வரையில், 20 பேரைக் காணவில்லை. இதில், 13 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வு, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு மற்றும் கல்லுாரி தேர்வுகள் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே இளம்பெண்கள் மாயமாவது அதிகரிக்கும் சூழல் உள்ளது என, காவல் துறையினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தவிர்க்க, முறையாக விழிப்புணர்வு தேவை என, சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாயமாகும் நபர்கள் குறித்து, காவல் நிலையங்களில் முறையாக புகார் பெற்று, போலீசார் தேடி வருகின்றனர். இதில், பலரை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் அனுப்பி வைக்கிறோம். காதல் வயப்பட்டு ஓடும் பெண்களை முறையாக ஆலோசனைகளை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைக்கிறோம்.
அதே நேரத்தில், பெற்றோரும், பெண்களின் விஷயத்தில் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களிடத்தில், ஏதேனும் மாற்றம் தெரிந்தால், முறையாக ஆலோசனை வழங்கலாம். இது, இளம்பெண்கள் மாயமாவதைத் தடுக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் ஆர்.சதீஷ் கூறியதாவது:
திருமணமாகாத இளம்பெண்கள், மாணவர்கள் வீட்டின் நிலையையும், பெற்றோரையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் தங்களது குழந்தைகளை மனதில் வைக்க வேண்டும்.
இவை இருந்தாலே, எந்தவித குற்ற உணர்வுகளுக்கும் ஆளாக மாட்டார்கள். இவற்றை நினைக்காமல் விட்டால்தான், சமுதாயத்தின் வெறுப்புணர்வை சம்பாதிக்கும் சூழல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.