/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரு ஆண்டிலே 443 பழங்குடியினர் வீடுகள்...சேதம்: 2 நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத அவலம்
/
இரு ஆண்டிலே 443 பழங்குடியினர் வீடுகள்...சேதம்: 2 நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத அவலம்
இரு ஆண்டிலே 443 பழங்குடியினர் வீடுகள்...சேதம்: 2 நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத அவலம்
இரு ஆண்டிலே 443 பழங்குடியினர் வீடுகள்...சேதம்: 2 நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத அவலம்
UPDATED : டிச 05, 2025 06:27 AM
ADDED : டிச 05, 2025 06:20 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருளர் பழங்குடியின மக்களுக்கு, 20 கோடி ரூபாய் மதிப்பில், 443 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, இரு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், வீடுகளின் சுவர், தரை, கான்கிரீட் தளம் உள்ளிட்டவை சேதமாகி உள்ளன. தரமற்றதாக கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள், இரண்டு நாள் மழைக்கே தாக்குபிடிக்கவில்லை என, பழங்குடியினர் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய இருளர் மக்கள், ஏரிக்கரை, குளம், குட்டையின் கரைப்பகுதிகளில், ஓலை குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
பேரிடர் காலங்களில் இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தலா 300 சதுர அடியில் ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக வீடுகள் கட்டும் பணி, 2022ல் துவங்கியது.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் - 76; சிங்காடிவாக்கத்தில் - 100; குண்டுகுளம் - 58; உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் - 178; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் காட்ரம்பாக்கத்தில் - 31 வீடுகள் என, மொத்தம் 443 வீடுகள் 20 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டு, 2023ல் ஒப்படைக்கப்பட்டன. அந்த வீடுகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டது.
வீடுகளில் வசிக்க துவங்கியது முதலே, இருளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மின் இணைப்பு கிடைக்காதது, சுடுகாடு வசதி இல்லாதது போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டனர்.
குறிப்பாக, காட்ரம்பாக்கத்தில் இருளர்களின் வீடுகள் ஒழுகுவதாக, கடந்தாண்டு புகார் எழுந்ததை அடுத்து, வீட்டின் மாடியில் கற்கள் பதிக்கப்பட்டன. இருப்பினும், பணிகளை சரிவர கவனிக்கவில்லை என, இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த இருநாட்களாக பெய்த 'டிட்வா' புயல் மழையால், காஞ்சிபுரம், குண்டுகுளம் கிராமத்தில் கட்டப்பட்ட 58 இருளர் வீடுகளில், கான்கிரீட் தளம் ஒழுகி வருகிறது. தவிர, தரை முழுதும் பெயர்ந்துள்ளன. கைகளால் தொட்டாலே சுவர்களில் கான்கிரீட் பூச்சு உதிர்கிறது.
முதல்வர் ஸ்டாலின், இந்த வீடுகளை திறந்து இரு ஆண்டுகளே ஆன நிலையில், தரை, சுவர், கான்கிரீட் தளம் போன்றவை சேதமடைந்து வருவதால், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த வீடுகள் தாங்குமோ என, இருளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுதும் ஐந்து இடங்களில் கட்டப்பட்ட 443 வீடுகளிலும், இதே பிரச்னை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருளர்கள் வேதனை யுடன் கூறியதாவது:
இரு நாட்கள் பெய்த மழைக்கே, எங்கள் வீடுகளில் ஈரப்பதம் அதிகரித்து, கான்கிரீட் தளங்களில் நீர் ஒழுகிறது. கனமழை பெய்தால், பல இடங்களில் மழைநீர் அதிகளவில் சொட்டுகிறது.
அரசு நிதி ஒதுக்கியும், தரமற்ற முறையில் கட்டியதால், இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வீடுகள் தாங்குமோ என தெரியவில்லை. அரசு, எங்களின் வீடுகளை சரி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை நடத்த கோரிக்கை
கீழ்கதிர்பூர் கிராமத்தில், மத்திய, மாநில அரசு நிதியின் கீழ், 200 கோடி ரூபாய் மதிப்பில், 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், 32 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பலரது மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதுபோல, இருளர் பழங்குடியினரின் 443 வீடுகளை தரமற்ற முறையில் கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பொறியாளர்களை அனுப்பி, வீடுகளை ஆய்வு செய்ய சொல்கிறேன். நான் புதிதாக பொறுப்பேற்று உள்ளேன். வீடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். - தீபிகா, உதவி திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம்.

