/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடியும் நிலையில் 48 தொகுப்பு வீடுகள் 5 ஆண்டுகளாக போராடியும் பலனில்லை
/
இடியும் நிலையில் 48 தொகுப்பு வீடுகள் 5 ஆண்டுகளாக போராடியும் பலனில்லை
இடியும் நிலையில் 48 தொகுப்பு வீடுகள் 5 ஆண்டுகளாக போராடியும் பலனில்லை
இடியும் நிலையில் 48 தொகுப்பு வீடுகள் 5 ஆண்டுகளாக போராடியும் பலனில்லை
ADDED : ஜன 03, 2025 01:45 AM

ஸ்ரீபெரும்புதுார், திருமங்கலம் ஊராட்சியில், 30 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட 48 தொகுப்பு வீடுகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், உயிர் பயத்துடன் பயனாளிகள் வசித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம், 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிராமப்புறங்களில் வசிக்கும் இருளர், அருந்ததியர், நரிக்குறவர் என, பட்டியலினத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், கட்டி கொடுக்கும் வீடுகள் தரமற்றதாக உள்ளதால், கான்கிரீட் கூரைகள் சேதமாவதும், தண்ணீர் கசிவதும், சுவர் இடிந்து விழுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 443 இடங்களில், இருளர் இன மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள், ஒரே ஆண்டில் சேதமான விவகாரம், மோசமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
அவ்வாறு மிக மோசமான நிலையில் இருக்கும் தொகுப்பு வீடுகள், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் உள்ளன.
இங்கு, பொருளாதாரத்தில் மிகமும் பின்தங்கிய அருந்ததியர் சமுதாயத் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக அரசால் கடந்த, 1,994ல், இங்குள்ள 48 அருந்ததியர் சமுதாய குடும்பத்திற்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
தற்போது 30 ஆண்டுகளை கடந்த நிலையில், தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமடைந்து, ஆபத்தான நிலையில் இம்மக்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர். வீட்டின் தரை, கான்கிரீட் தளம் உள்ளிட்ட பல இடங்களில் முற்றிலும் சேதமாகி உள்ளது.
கான்கிரீட் தளம் உதிர்ந்து விழுவதால், இரவு நேரங்களில் வீட்டிற்குள் துாங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.
மழை காலங்களில் சுவர் மற்றும் கான்கிரீட் தளத்தில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. இதனால், கான்கிரீட் தளம் உதிர்ந்து விழுகிறது. கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், ஈரமான சுவற்றில் மின்சாரம் பாய்வதால், சுவரை தொடும் போது மின்சாரம் பாய்ந்து, மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
சேதமடைந்து மோசமான நிலையில் வீடுகள் உள்ளதால், புதிய வீடுகளை கட்டி கொடுக்க பல ஆண்டுகளாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலங்கள் என பல இடங்களில், பயனாளிகள் தரப்பில் மனு அளித்துள்ளனர்.
ஊராட்சியின் வார்டு உறுப்பினர் ரஜினி என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தன் ஒரு பக்க மீசையை அகற்றி நுாதன போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தால், பயனாளிகள் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, 'சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் வழிமுறையின் படி, புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.