/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
என்கவுன்டர் பயத்தால் சிறைவாசத்தில் ரவுடி 11 கொலை உட்பட 65 வழக்குகள் நிலுவை
/
என்கவுன்டர் பயத்தால் சிறைவாசத்தில் ரவுடி 11 கொலை உட்பட 65 வழக்குகள் நிலுவை
என்கவுன்டர் பயத்தால் சிறைவாசத்தில் ரவுடி 11 கொலை உட்பட 65 வழக்குகள் நிலுவை
என்கவுன்டர் பயத்தால் சிறைவாசத்தில் ரவுடி 11 கொலை உட்பட 65 வழக்குகள் நிலுவை
ADDED : ஜன 24, 2024 10:29 PM

காஞ்சிபுரத்தில் தொழிலதிபர்களையும், பட்டு சேலை முதலாளிகளையும் மிரட்டி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்த ரவுடி ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் உயிரிழந்தார்.
அவரது பாணியை பின்தொடர்ந்து, வியாபாரிகளையும், தொழிலதிபர்களையும் பிரபல 'ஏ' பிளஸ் ரவுடி பொய்யாக்குளம் தியாகு, 33, தற்போதும் மிரட்டி வருகிறார். இதுசம்பந்தமாக ஏராளமான வழக்குகள் அவர் மீது உள்ளன.
சரித்திர பதிவேடு குற்றவாளியான தியாகு, இரு ஆண்டுகளுக்கு முன் வரை ஹரியானா மாநிலத்தில் தலைமறைவாக இருந்தார். ஏ.டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார், 2022 ஜனவரி மாதம் இவரை கைது செய்தனர்.
அப்போது, ஆறாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டம் அவர் மீது பதிவு செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களில், ஜாமீன் பெற்று வெளியே வருவது வழக்கம். ஆனால், இம்முறை பாளையங்கோட்டை சிறையிலேயே ஜாமீன் வாங்காமல் இரு ஆண்டுகளாக உள்ளார்.
வெளியே வந்தால், போலீஸ் என்கவுன்டர் செய்யும் என்பதால், ஜாமீன் வாங்க முயற்சிக்காமல், சிறைவாசம் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த இரு ஆண்டுகளில், மூன்று என்கவுன்டர் சம்பவங்களில், நான்கு ரவுடிகள் இறந்துள்ளனர்.
அதுபோல், 'தன்னையும் போலீசார் என்கவுன்டர் செய்வர் என்ற பயத்தாலேயே ஜாமீன் வாங்கி வெளியே வராமல் உள்ளார்' என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காஞ்சி போலீஸ் வட்டாரம் கூறியதாவது:
ரவுடி தியாகு மீது, 11 கொலை வழக்கு, 23 கொலை மிரட்டல் உள்ளிட்ட, 65க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டி கொலை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
விழுப்புரம் தி.மு.க., நகர செயலர் செல்வராஜ் கொலை வழக்கு, காஞ்சிபுரம் தே.மு.தி.க., நிர்வாகி சரவணன் கொலை வழக்கு என, முக்கிய அரசியல் கொலைகளுக்கும் தியாகு தான் முக்கிய குற்றவாளி.
இதுவரை, ஆறு முறை இவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின், மூன்று மாதங்களில், உயர் நீதிமன்றத்தை அணுகி வெளியே வருவது வழக்கம். ஆனால், இம்முறை ஜாமீன் வாங்க முயற்சிக்காமல், இரு ஆண்டுகளாக சிறையிலேயே இருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் தொடர்ந்து என்கவுன்டர் சம்பவங்கள் நடைபெறுவதால், தன்னை போலீசார் சுடுவர் என, பயந்தே வெளியே வராமல் இருக்கிறார்.
அவ்வாறு ஜாமீன் வாங்கி வெளியே வந்தாலும், முந்தைய குற்ற வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்படுவார் என, அவருக்கும் தெரியும்.
இப்போதும், சிறையிலிருந்தே பலரையும் மிரட்டுவதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து புகார் அளிக்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.