/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் 72 இடங்கள்...கண்காணிப்பு! :தென்மேற்கு பருவமழைக்கு 18 கால்நடைகள் பலி
/
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் 72 இடங்கள்...கண்காணிப்பு! :தென்மேற்கு பருவமழைக்கு 18 கால்நடைகள் பலி
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் 72 இடங்கள்...கண்காணிப்பு! :தென்மேற்கு பருவமழைக்கு 18 கால்நடைகள் பலி
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் 72 இடங்கள்...கண்காணிப்பு! :தென்மேற்கு பருவமழைக்கு 18 கால்நடைகள் பலி
ADDED : ஜூலை 17, 2024 11:45 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, 18 கால்நடைகள் இறந்த நிலையில், 5 வீடுகள் சேதமாகியுள்ளன. மாவட்டம் முழுதும், மழை, வெள்ள பாதிப்புக்குள்ளாகும், 72 இடங்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் அதிகம் உள்ள கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய் கிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைவான மழை பொழியும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஜூலை மாதம் துவக்கத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிக்கும் இடங்களாக, 72 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. மாவட்டத்தில், மழையால் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக குன்றத்துார் தாலுகாவிற்குட்பட்ட ராயப்பா நகர், புவனேஸ்வரி, அஷ்டலட்சுமி நகர் மற்றும் சுற்றிய இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு முகாம்
வெள்ளம் பாதிக்கும் இடங்களை கண்காணிக்க 11 துறை அலுவலர்கள் கொண்ட, 21 மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை நேரத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க, 93 மழை பாதுகாப்பு முகாம்களும் உள்ளன.
இந்த முகாம்கள் பெரும்பாலும் அருகில் உள்ள பள்ளி, அங்கன்வாடி, இ- - சேவை மையம் போன்ற கட்டடங்களாக இருக்கும். மேலும், மழை நேரத்தில் வீடுகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடிக்க, இருளர் இன பாம்பு பிடிப்போர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், படகுகளை தயார்படுத்த மீன்வளத் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜூன் மாதம் முதல், ஜூலை 16ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில், 12 செ.மீ., மழை, இயல்பாக பொழிய வேண்டும். ஆனால், 159 சதவீதம் அதிகமாக பொழிந்து, 31.1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், இயல்பை காட்டிலும் அதிக மழை சமீப நாட்களாக பொழிவதால், விவசாயிகளின் கால்நடைகள் இறப்பதும், வீடுகள் சேதமாவதும் தொடர்கிறது.
சமீப நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, இடி, மின்னல், மின்சாரம் பாய்ந்தது என, 15 மாடுகளும், 3 கன்றுகளும் இறந்துள்ளன. வாலாஜாபாதைச் சேர்ந்த ராஜன் என்பவர் மின்னல் தாக்கி இறந்துள்ளார்.
அதேபோல், கோளிவாக்கத்தில் மின்னல் தாக்கி, ஈஸ்வரன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளார். அதேபோல், 5 வீடுகள் சேதமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
அறிவுரைகள்
தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விபரம் பற்றி பேரிடர் மேலாண்மை துறையினர் கூறியதாவது:
மத்திய அரசின் 'ஆப்தமித்ரா' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 500 தன்னார்வலர்கள் மற்றும் கிராம வாரியாக முதல் நிலை பொறுப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க, முதல் நிலை பொறுப்பாளர்கள் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளன.
தன்னார்வலர்கள் மற்றும் மழைக்கால நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, போதிய பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க, நிரந்தர பாதுகாப்பு மையங்கள், தற்காலிக பாதுகாப்பு மையங்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகள் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள் மற்றும் மிதவைப் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட் ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்கவும், ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக அடைப்பதற்கு போதுமான சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பு வைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடிமைப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பேரிடர் மேலாண்மை துறையினர் கூறினர்.