பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் 8 லட்சம் டன்! மணல் தேக்கம் நீரை சேமிக்க முடியாமல் வீணாகும் என விவசாயிகள் கவலை
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் 8 லட்சம் டன்! மணல் தேக்கம் நீரை சேமிக்க முடியாமல் வீணாகும் என விவசாயிகள் கவலை
UPDATED : செப் 21, 2026 03:48 AM
ADDED : செப் 20, 2026 09:32 PM

அரசு அனுமதிக்கு காத்திருப்பதாக நீர்வள அதிகாரிகள் மழுப்பல்
உத்திரமேரூர்: பழையசீவரம் பாலாற்றின் 6 அடி ஆழ தடுப்பணையில் 8 லட்சம் டன் மணலை அகற்றாததால், வடகிழக்கு பருவமழை நீரை தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மணலை அகற்ற அரசு அனுமதிக்காக காத்திருப்பதாக, நீர்வளத் துறை அதிகாரிகள் மழுப்பல் பதிலையே திரும்ப திரும்ப சொல்வதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் சங்கமிக்கின்றன. இந்த ஆற்று படுகை, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், திருமுக்கூடல், புல்லம்பாக்கம், பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் 3,000 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்களுக்கு பாசனமாகவும் உள்ளது.
இதில் பாலாற்றில், திருமுக்கூடல் அருகே 'நபார்டு' திட்டத்தில் 42 கோடி ரூபாயில், 2020ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணையின் இருபுறமும், துணை கால்வாய் அமைக்கப்பட்டு, அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலமாக, 2,000 ஏக்கருக்கு பாசன வசதி பெறுகிறது.
மணல் தேக்கம்
இத்தடுப்பணை பயன்பாட்டிற்கு வந்ததும் 2021, 2022ல், ஒரு டி.எம்.சி., தண்ணீர் தேக்கப்பட்டது. தொடர்ந்து, ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் தண்ணீரோடு மணல் அடித்து வரப்பட்டது.
இதனால் 6 அடி ஆழம் உடைய இத்தடுப்பணை, தற்போது முழுதுமாக மணல் நிரம்பி, ஒரு அடி ஆழம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிறிய மழைக்கே தடுப்பணை நிரம்பி விடுகிறது.
இதுகுறித்து, பழையசீவரம் கிராம விவசாயிகள் கூறியதாவது:
தடுப்பணை முழுதும் மணல் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தண்ணீர் தேங்காமல் வடிந்து விடுகிறது.
தண்ணீரை சேமிக்க முடியாததால், கோடைக்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது; விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதனால், மழைக்காலத்திற்கு முன் தடுப்பணை மணல் அகற்ற நீர்வளத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் உத்திரமேரூர் த.வெ.க., -- எம்.எல்.ஏ., முனிரத்தினம், பாலாற்று தடுப்பணையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தடுப்பணை விரைவாக துார்வாரப்படும் என்றார். ஆனால் அதன்பின்னரும், எந்த பணியும் நடக்கவில்லை. தடுப்பணை இருந்தும் அதற்கான பயன்பாடு இல்லாததால் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழையசீவரம் தடுப்பணையில் தேங்கி இருக்கும் மணல் குறித்து, கனிம வள அதிகாரிகள் 'ட்ரோன்' எனும் ஆளில்லா விமானம் மூலமாக ஆய்வு நடத்தினர். இதில், 8.4 லட்சம் டன் மணல், தடுப்பணையில் தேங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மணலை அகற்றுவதற்கு, துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்த பின், மணலை விற்பனை செய்வதற்கு பதிலாக, ஆற்றிலேயே சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
