/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை முன் முற்றுகை 80 போராட்டக்காரர்கள் கைது
/
தொழிற்சாலை முன் முற்றுகை 80 போராட்டக்காரர்கள் கைது
தொழிற்சாலை முன் முற்றுகை 80 போராட்டக்காரர்கள் கைது
தொழிற்சாலை முன் முற்றுகை 80 போராட்டக்காரர்கள் கைது
ADDED : பிப் 13, 2024 03:55 AM

கடம்பத்துார், : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் ஊராட்சியில் எச்.எம்., கார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பி.சி.ஏ., என்ற மற்றொரு நிறுவனத்திற்கு மாறியது.
இதையடுத்து தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த 22 நிரந்தர தொழிலாளர்கள், 158 ஒப்பந்த தொழிலாளர்கள் என, 180 பேர் 2019ல் பணி இழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை வைத்தனர். முதல்வருடன் இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரன் தலைமையில் மூன்று முறை பேச்சு நடத்தினர்.
பின், முதல்வர் அறிவுறுத்தல் படி, அமைச்சர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மூன்று முறை தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சு நடத்தியும், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் வேலையிழந்த தொழிலாளர்கள், குடும்பத்துடன் நேற்று தனியார் தொழிற்சாலை நுழைவாயில் பகுதியில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தனியார் தொழிற்சாலை பகுதியில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் பா.ம.க., இளைஞரணி செயலர் பாலயோகி, கடம்பத்துார் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் சுதாகர் உட்பட பலர், போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சில் சமரசம் ஏற்படாததால், போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் படுத்து மறியல் செய்தனர்.
முன்னாள் அமைச்சர் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, குண்டு கட்டாக துாக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். அவர்களை அரசு பேருந்தில் ஏற்றி காக்களூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்ததாக தாலுகா போலீசார் தெரிவித்தனர்.