தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பழையசீவரம் தடுப்பணையில் குவிந்துள்ள மணல் 8.40 லட்சம் டன்! பருவ மழைக்கு முன் அகற்றி கல்லா கட்டா திட்டம்

பழையசீவரம் தடுப்பணையில் குவிந்துள்ள மணல் 8.40 லட்சம் டன்! பருவ மழைக்கு முன் அகற்றி கல்லா கட்டா திட்டம்

பழையசீவரம் தடுப்பணையில் குவிந்துள்ள மணல் 8.40 லட்சம் டன்! பருவ மழைக்கு முன் அகற்றி கல்லா கட்டா திட்டம்


UPDATED : ஆக 05, 2026 06:54 AM

ADDED : ஆக 04, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 06:54 AM ADDED : ஆக 04, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:மூன்று ஆண்டுகளாக துார்வாராமல் விட்டதால், வாலாஜாபாத் அருகே பழையசீவரம் தடுப்பணையில், 8.4 லட்சம் டன் மணல் சேர்ந்துள்ளது, 'ட்ரோன்' வாயிலான ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மழைநீர் தேக்க பெரும் தடையாக இருப்பதால், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன், மணல் குவியலை அகற்றி விற்பனை செய்ய, நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது. அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் -பழவேரி பகுதியில், நபார்டு திட்டத்தின் கீழ், 2020ல், 42 கோடி ரூபாய் செலவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது.

இதன் மூலம் திருமுக்கூடல், பழையசீவரம், புல்லம்பாக்கம், பினாயூர், உள்ளாவூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் திட்டமிடப்பட்டது.

தடுப்பணையின் இருபுறங்களிலும் துணைக் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மழைக்காலங்களில், 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்த 2021, 2022ம் ஆண்டுகளில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 1 டி.எம்.சி., தண்ணீர் தேங்கியது. அதன்பின் ஒவ்வொரு பருவமழையிலும் வெள்ளநீருடன் அடித்து வரப்பட்ட மணலால், அணையின், 6 அடி ஆழத்தை முழுமையாக நிரப்பிவிட்டது.

தற்போது தடுப்பணை இருந்த இடமே சமதளமாக இருக்கும் அளவுக்கு மணல் குவிந்துள்ளது, விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால், சிறிய மழைக்கே தடுப்பணை நிரம்பி, அதில் தேங்கும் தண்ணீர் ஒரு மாதத்திற்குள் வறண்டு விடுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயராமல், விவசாயத்திற்கான பயனும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

பலமுறை கோரிக்கை விடுத்தும், பழைய சீவரம் தடுப்பணையில் குவிந்துள்ள மணலை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்போதே பணியை தொடங்கினால்தான், மணலை முழுதும் அகற்றி, மழை காலத்தில் தடுப்பணையில் தண்ணீரை சேமிக்க முடியும். அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தடுப்பணையில் தேங்கியுள்ள மணலை அகற்ற, 3.30 கோடி ரூபாய் ஒதுக்கக்கோரி, தேர்தலுக்கு முன்பே, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், நீர்வளத் துறையின் கனிமப் பிரிவு சார்பில், 'ட்ரோன்' ஆய்வு நடத்தப்பட்டதில், 8.4 லட்சம் டன் மணல் தேங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மணலை அகற்றி விற்பனை செய்வதன் மூலம், தடுப்பணையை மீண்டும் தண்ணீர் தேக்கும் நிலைக்கு கொண்டு வர முடியும்.

மணல் விற்பனைக்கான அறிவிப்பு மற்றும் ஏல நடைமுறைகள் அனைத்தும், இணையதளம் வாயிலாக வெளிப்படையாக மேற்கொள்ளப்படும்.

இதற்கான முழுமையான திட்ட அறிக்கையை கனிமப் பிரிவு வாயிலாக, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us