/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8,540 கன அடி நீர் வெளியேற்றம்
/
பழையசீவரம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8,540 கன அடி நீர் வெளியேற்றம்
பழையசீவரம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8,540 கன அடி நீர் வெளியேற்றம்
பழையசீவரம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8,540 கன அடி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 16, 2025 12:31 AM

வாலாஜாபாத்,:பாலாறு மற்றும் செய்யாறு வெள்ளப்பெருக்கால் பழையசீவரம் பாலாற்று தடுப்பணை நிரம்பி, வினாடிக்கு 8,540 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக திருமுக்கூடல் அருகே பாலாற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் பருவ மழை தீவிரம் அடையும் போது செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
இந்த ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பருவ மழைக்கு முன்னதாகவே, ஐந்து நாட்களாக செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமந்தண்டலம், சிலாம்பாக்கம், வெங்கச்சேரி உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதேபோல, தமிழ்நாடு - ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழை காரணமாக கடந்த 13ம் தேதி முதல் பாலாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை இல்லாமலே, பாலாறு மற்றும் செய்யாற்று படுகைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் - பழவேரி பாலாற்று தடுப்பணை நிரம்பி, இரண்டு நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறை பொறியாளர் மார்கண்டேயன் கூறியதாவது:
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பழையசீவரம் தடுப்பணை நிரம்பி வினாடிக்கு 8,540 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், தடுப்பணை நிரம்பி உள்ளதால் பாலாற்று துணை கால்வாய்கள் வாயிலாக அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
பாலாறு மற்றும் செய்யாறு வெள்ளம் குறித்தும், தடுப்பணை மற்றும் ஏரிகள் நிலவரம் குறித்தும், நீர்வளத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.