/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத்தில் வீணாகும் வணிக வளாகம்
/
வாலாஜாபாத்தில் வீணாகும் வணிக வளாகம்
ADDED : மார் 19, 2025 12:44 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி 1வது வார்டில், வெள்ளேரியம்மன் கோவில் பகுதி உள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து, வெள்ளேரியம்மன் கோவில் வழியாக கிதிரிப்பேட்டை செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையில், ரயில்வே நிலையம் பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளுக்கு முன் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டன.
ஒரு அறை கொண்ட 10 கட்டடங்கள் தனி, தனியாக ஏற்படுத்தப்பட்டு, அவை குத்தகைக்கு விடப்பட்டு பல்வேறு கடைகள் அச்சமயம் செயல்பட்டு வந்தன.
பின், நாளடைவில் அக்கட்டடங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லமால் வீணாகி வருகிறது.
இதனால், பேரூராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அக்கட்டட பகுதிகள், செடிகள் வளர்ந்தும், சமூக விரோதிகள் புகலிடமாகி வருவதாகவும் அப்பகுதியினர் பலரும் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, பேரூராட்சி வாசிகள் கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளடங்கி உள்ளன. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர் தினசரி வாலாஜாபாத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி, வெள்ளேரியம்மன் கோவில் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய வளாக கட்டடங்கள் நிர்வாக சீர்கேடு காரணமாக பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது.
பேரூராட்சிக்கு சொந்தமான இந்த வணிக வளாக கட்டடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாலாஜபாத்தில் இதுவரை மீன் சந்தை உள்ளிட்ட இறைச்சி கூடாரம் ஏதும் ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், இறைச்சிகள் வாங்க மக்கள் அலைச்சல் படவேண்டி உள்ளது.
எனவே, பயன்பாடின்றி வீணாகும் இக்கட்டடங்களை இறைச்சி கூடாரம் போன்றவைக்கு உபபயோகித்து, மக்களுக்கு பயன் ஏற்படுத்துவதோடு, வருவாய் ஈட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.