/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர் கோவிலை ஒரு தரப்பினர் உரிமை கோரி பூட்டியதால் பரபரப்பு
/
விநாயகர் கோவிலை ஒரு தரப்பினர் உரிமை கோரி பூட்டியதால் பரபரப்பு
விநாயகர் கோவிலை ஒரு தரப்பினர் உரிமை கோரி பூட்டியதால் பரபரப்பு
விநாயகர் கோவிலை ஒரு தரப்பினர் உரிமை கோரி பூட்டியதால் பரபரப்பு
ADDED : ஆக 28, 2025 01:43 AM

உத்திரமேரூர்:கடல்மங்கலத்தில், விநாயகர் கோவிலை, ஒரு தரப்பினர் உரிமை கோரி நேற்று பூட்டினர்.
உத்திரமேரூர் தாலுகா, கடல்மங்கலம் கிராமத்தில் விஜயகணபதி விநாயகர் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன், விநாயகர் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளாக விநாயகர் கோவில் பூட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் ஒரு தரப்பினர், கோவிலில் விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக, விநாயகர் சிலையும் கொண்டு வரப்பட்டு இருந்தது.
தகவலறிந்த, மற்றொரு தரப்பினர், கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த, உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தினர்.
பின், விநாயகர் சிலையை வேறொரு இடத்தில் வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா நடத்துமாறு, விழா ஏற்பாடு செய்திருந்த தரப்பினரிடம் கூறினர்.
இதையடுத்து, விநாயகர் சிலையை வேறொரு இடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டது.
கடல்மங்கலத்தில் விநாயகர் கோவிலை பூட்டு போட்டு பூட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடல்மங்கலம் விஜயகணபதி விநாயகர் கோவிலை, ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஒரு தரப்பினர் முயன்றபோது, மற்றொரு தரப்பினர் கோவிலை பூட்டியுள்ளனர்.
இந்த கோவிலில் வழிபாடு செய்வது குறித்து, இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.