ADDED : நவ 27, 2024 11:12 PM

குன்றத்துார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஜல்லிக்கற்களை கொட்டிய டிப்பர் லாரி, 'ஹைடிராலிக்'கை இறக்காமலயே நேற்று முன்தினம் இரவு 11.00 மணி அளவில் குன்றத்துார் நோக்கி சென்றுள்ளது. புதுப்பேடு பகுதியை கடந்த சென்ற போது டிப்பர் லாரியின் பின்பக்க பகுதி மோதி நெடுஞ்சாலை குறுக்கே அமைக்கப்பட்ட அறிவிப்பு பலகை உடைந்து கீழே விழுந்தது. அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.
மின்கம்பம் விழுந்ததால் புதுப்பேடு அதை சுற்றியுள்ள பகுதியில் எட்டு மணி நேரத்திற்கு மேல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை நடுவே அறிவிப்பு பலகை விழுந்ததால் எதிர் திசையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், நெரிசல் ஏற்பட்டு, நேற்று காலை 2 கி.மீ.,துாரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இந்த சம்பவம் குறித்து மின்வாரியத்தினர், நெடுஞ்சாலை துறையினர் புகார் அளிக்கவில்லை. இதனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.