/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காய்கறி கடையாக மாறிய பயணியர் நிழற்குடை
/
காய்கறி கடையாக மாறிய பயணியர் நிழற்குடை
ADDED : அக் 06, 2025 12:59 AM

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள, காய்கறி மூட்டைகளால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் இடவசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், காஞ்சிபுரம் செல்லும் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை உள்ளது. சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் உட்பட பல தரப்பட்ட மக்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுத்தத்தில், பயணியருக்கு இருக்கை வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதன் அருகே உள்ள காய்கறி கடைக்கு தேவையான, காய்கறி மூட்டைகளை, பயணியர் நிழற்குடையில் உள்ள இருக்கை மற்றும் தரையில் அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால், நிழற்குடைக்கு வரும் பயணியர் இடவசதி இல்லாமல், சாலையோரம் வெயிலில் காத்திருக்க வேண்டி உள்ளது. குழந்தைகள், பெண்கள், வயதானோர் பேருந்திற்கு காத்திருக்க இடம் இல்லாமல் பெரும் அவதி அடைகின்றனர்.
எனவே, சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.