/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
/
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
ADDED : ஆக 02, 2025 12:24 AM

காஞ்சிபுரம்:ஆடி மாத மூன்றாவது வெள்ளி கிழமையான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 26வது வார்டு நசரத்பேட்டையில் உள்ள வேலாத்தம்மன், புவனகிரி அம்மன் கோவிலில் மூன்றாவது ஆடி வெள்ளியான நேற்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் சந்தன காப்பு அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர்.
படவேட்டம்மன்
காஞ்சிபுரம் மாநகராட்சி நத்தப்பேட்டை நடுத்தெரு படவேட்டம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மண்டல அபிேஷகமும், தொடர்ந்து அன்னதானமும், குளக்கரையில் அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 11:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.
கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில் இருந்து ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலுக்கு அம்மன் பூங்கரகம் கொண்டு வரப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.
சந்தவெளி அம்மன்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மனுக்கு நேற்று மாலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தும்பவனம் மாரியம்மன்
காஞ்சிபுரம் முல்லாபாளையம் தெருவில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீதுர்கை விழா குழு சார்பில் நடந்த ஆடித்திருவிழாவில் நேற்று மாலை 6:00 மணிக்கு தும்பவனம் மாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.
ரேணுகாம்பாள்
காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் சிக்னல் அருகில் உள்ள ரேணுகாம்பாளுக்கு பால், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மருதம் எல்லையம்மன்
உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. விழாவயெசாட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை நடந்தது.தொடர்நது. உத்சவர் எல்லையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக பவனி வந்தார்.