ADDED : செப் 10, 2026 08:44 PM
* கம்பன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தையும் அரசு... * ரூ.350 கோடிக்கு மதிப்பீடு தயாரிப்போடு முடக்கம்
காஞ்சிபுரம், செப். 11–
பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டதால், 350 கோடி ரூபாயில் கம்பன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தையும் அரசு கைவிட்டுள்ளது. வேறு ஏதேனும் நிதி பெற்று, கம்பன் கால்வாயை அரசு சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில், கம்பன் கால்வாய் என்ற முக்கிய நீர் வழித்தடம் தொடங்குகிறது. அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது.
இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, பரந்துாரில், 5,320 ஏக்கரில் அமைக்க கடந்த தி.மு.க., அரசு திட்டமிட்டது. இதற்காக, 3,331 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணியில், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் தொடங்கியது.
விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களின் குறுக்கே, 6 கி.மீ., கம்பன் கால்வாய் கடக்கிறது. எனவே, 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அந்த பகுதியில் மட்டும் மாற்று கால்வாய் அமைக்கவும், மொத்தமுள்ள 44 கி.மீ., கம்பன் கால்வாயை தேவைக்கேற்ப சீரமைக்கவும், நீர்வளத்துறையின் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக, பரந்துார் ஊராட்சி காட்டுப்பட்டூர் கிராம எல்லையுடன், கால்வாய் துண்டிக்கப்பட இருந்தது. பரந்துார் காட்டுப்பட்டூர் கிராமத்தில் தொடங்கும் புதிய கால்வாய், மேல்பொடவூர், தொடூர், கள்ளிப்பட்டு, சிங்கிலிபாடி ஆகிய கிராமங்களின் வழியாக, கண்ணன்தாங்கல் கிராம கூட்டு சாலை வழியாக மீண்டும் கம்பன் கால்வாயில் இணைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த புதிய கால்வாய், 8 கி.மீ., துாரம் அமைக்கப்பட உள்ளன. தற்போது, 15 மீ., அகலத்தில் உள்ள கால்வாயை, 17 மீ., அகலப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி சீரமைக்கவும் நீர்வளத்துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.
பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டுள்ளதால், நீர்வளத் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பன் கால்வாயை சீரமைக்கும் திட்டமும் கைவிடப்படுகிறது.
இதனால், கால்வாய் நடுவே இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்தவும், சேதம் ஏற்பட்ட கரை சீரமைக்கவும் முடியாத நிலை ஏற்படும். மழைக்காலத்தில் ஏரிகளில் வெள்ள நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
கம்பன் கால்வாய் மூலமாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன. பல ஆண்டுகளாக கப்பன் கால்வாய் துார் வாரப்படவில்லை; கரைகளை பலப்படுத்தவும் இல்லை; நீர் வழித்தடங்களும் புதுப்பிக்கப்படவில்லை.
இதனால், கால்வாயில் பெருக்கெடுத்து ஓரம் வெள்ள நீரை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய, நீர்வள துறையினர் கம்பன் கால்வாயை சீரமைக்க முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர் வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பரந்துார் விமான நிலைய திட்டத்தில், 8 கி.மீ., மாற்று கால்வாய் அமைக்கும் திட்டம் மற்றும் கம்பன் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு, 350 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு அனுப்ப இருந்தோம்.
பரந்துார் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளதால், கப்பன் கால்வாய் சீரமைப்பு திட்டமும், அறிக்கை தயாரிக்கும் முன்பே முடங்கி விட்டது. இனிமேல், வேறு ஏதேனும் ஒரு திட்டத்தில் நிதி கேட்டு சீரமைத்தால் மட்டுமே, கம்பன் கால்வாய்க்கு விடிவு காலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
