/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செரப்பனஞ்சேரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
செரப்பனஞ்சேரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
செரப்பனஞ்சேரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
செரப்பனஞ்சேரியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 10, 2025 08:07 AM

ஸ்ரீபெரும்புதுார்:
வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், தாறுமாறாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இந்த சாலை, வண்டலுார் முதல் வாலாஜாபாத் வரை 33 கி.மீ., நான்கு வழி உடையது. ஒரகடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வந்ததை அடுத்து, இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை குறைக்க, தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், வண்டலுார் -- வாலாஜாபாத் நான்கு வழி சாலையில் இருந்து, ஆறு வழியாக விரிவுபடுத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடந்தன.
முதற்கட்டமாக, வண்டலுாரில் இருந்து ஒரகடம் வரை, 17 கி.மீ., சாலை 150 கோடி ரூபாய் மதிப்பிலும், இரண்டாம் கட்டமாக, ஒரகடத்தில் இருந்து வாலாஜாபாத் வரையில், 16 கி.மீ., சாலை, 180 கோடி ரூபாய் செலவிலும் விரிவுபடுத்தப்பட்டன.
தற்போது, நாளொன்றுக்கு 50,000க்கும் அதிகமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
அதிவேகம்
இந்த சாலையில், படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, செரப்பனஞ்சேரி, காஞ்சிவாக்கம், கூழங்கலசேரி, நாட்டரசம்பட்டு, சிறுவஞ்சூர், உமையாள்பரனசேரி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர் 500க்கும் மேற்பட்ட மாத்துார், படப்பை உள்ளிட்ட பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், மேற்கூறிய கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால், செரப்பனஞ்சேரியில் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதேபோல, அவ்வப்போது, சாலையை கடக்கும் இருசக்கர வாகனங்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
ஒருவர் பலி
கடந்த வாரம், இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்த செரப்பனஞ்சேரியைச் சேர்ந்த சிவகுமார், 45, என்பவர் மீது, தாம்பரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்ற தடம் எண் 583 அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் சாலையில் இரண்டு பக்கங்களிலும் பேரிகேட்டுகள் அமைக்கப்பட்டன.
இருந்தும், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், சாலையை கடக்க சிரமம் அடைந்து வருவதுடன், விபத்து அச்சத்தில் சாலை கடந்து வருகின்றனர்.
எனவே, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள காலை, மாலை 'பீக்ஹவர்' நேரங்களில், போலீசார் அப்பகுதியில், வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப் படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

