/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் கனவு இல்ல வீடுகள் ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு: மாற்றுக்கட்சியினர் குற்றச்சாட்டு
/
உத்திரமேரூரில் கனவு இல்ல வீடுகள் ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு: மாற்றுக்கட்சியினர் குற்றச்சாட்டு
உத்திரமேரூரில் கனவு இல்ல வீடுகள் ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு: மாற்றுக்கட்சியினர் குற்றச்சாட்டு
உத்திரமேரூரில் கனவு இல்ல வீடுகள் ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு: மாற்றுக்கட்சியினர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 05, 2025 10:24 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், கனவு இல்ல வீடுகள் ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக மாற்றுக்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள, பெரும்பாலான மக்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.
தொடக்கம்
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள இவர்கள், சொந்தமாக வீடு கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசின் மூலம் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் கிடைக்குமா என, எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 2025 --- 26ம், நிதி ஆண்டில் கனவு இல்ல வீடுகள் வழங்க, பயனாளிகளை தேர்வு செய்ய குழு அமைத்து ஊரக வளர்ச்சி துறையினர் அதற்கான பணியை தொடங்கினர்.
பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சி தலைவர், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி உறுப்பினர்களை கொண்டு, 731 தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தனர்.
பின், ஊராட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்க, ஊரக வளர்ச்சி துறையினர் முடிவு செய்தனர்.
பின், 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில், வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த வாரத்தில் நடந்தது.
அதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் இருக்கும் ஊராட்சிகளுக்கு அதிகமான கனவு இல்ல வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் இருக்கும் சில ஊராட்சிகளுக்கு மிக குறைவான வீடுகள் ஒதுக்கப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியத்தில், மாற்றுக்கட்சி ஊராட்சி தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில் வீடுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் தலையீட்டால் தகுதியானவர்களுக்கு ஆணை வழங்கப்படாமல் உள்ளதாக, மாற்றுக்கட்சி ஊராட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கிடைக்கவில்லை
இது குறித்து மாற்றுக்கட்சி ஊராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்தில் கனவு இல்ல வீடு வழங்க, ஊராட்சிகள்தோறும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பட்டியலை அனுப்பினர்.
ஆனால், வீடு கட்ட ஆணை வழங்குவதில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருந்ததால், நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் மீண்டும் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு வீடுகட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்தில் இதுவரை 731 கனவு இல்ல வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில், கனவு இல்ல வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் விடுபட்டவர்களுக்கு அடுத்த கட்டம் வீடு கட்ட ஆணை வழங்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.