sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழவேற்காடு கடலில் மீண்டும் 5 படகுகள் கவிழ்ந்து விபத்து

/

பழவேற்காடு கடலில் மீண்டும் 5 படகுகள் கவிழ்ந்து விபத்து

பழவேற்காடு கடலில் மீண்டும் 5 படகுகள் கவிழ்ந்து விபத்து

பழவேற்காடு கடலில் மீண்டும் 5 படகுகள் கவிழ்ந்து விபத்து


ADDED : டிச 24, 2024 12:26 AM

Google News

ADDED : டிச 24, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

14 நாளில் மூன்றாவது சம்பவத்தால் மீனவர்கள் அச்சம்

பழவேற்காடு, பழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின், ஐந்து படகுகள் அலையில் சிக்கி கவிழ்ந்தன. கடந்த 14 நாட்களில், அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள் நடந்து உள்ளதால், மீனவர்கள் இடையே அச்சம் நிலவுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில், 15 மீனவ கிராமத்தினர் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இவர்கள் பைபர் படகுகளில், கடலில், 8 -- 10 நாட்டிக்கல் மைல் தொலைவு சென்று, மீன் பிடித்து வருகின்றனர். பழவேற்காடு மீனவப் பகுதியில், 1,600 பைபர் படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. அவ்வப்போது புயல் எச்சரிக்கைகளும் தொடர்ந்தது. மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்க்கும்படி, மீன்வளத் துறை அறிவுறுத்தல்களும் வழங்கி வருகிறது.

புயல், மழை அறிகுறி இல்லை என்றாலும், கடலில் அலைகளின் சுழற்சி அதிகமாக இருப்பதுடன், நீரோட்டம் வேகமாக நடைபெறுகிறது. அன்றாட உணவு தேவைக்காகவும், வாழ்வாதாரத்தை எண்ணியும் சில மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர். அச்சமயங்களில் ராட்சத அலைகளில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.

கடந்த 10ம் தேதி பசியாவரம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு, 16ம் தேதி வைரவன்குப்பம் மீனவர்கள் சென்ற படகு ஆகியவை ராட்சத அலையில் சிக்கி விபத்திற்கு உள்ளாகின. இந்த இரு விபத்துக்களிலும், படகுகள் உடைந்து சேதமானதுடன், வலைகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில், நேற்று, பழவேற்காடு, கோரைகுப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த, மீனவர்கள், 30 படகுகளில் அதிகாலையில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று, காலை 7:00 மணி முதல் கடல் சீற்றம் திடீரென அதிகரித்தது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருப்பதை தெரிவிக்கும் வகையில், எண்ணுார் துறைமுகத்தில், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.

கடலுக்கு சென்ற கோரைகுப்பம் மீனவர்கள், இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக கரை திரும்ப திட்டமிட்டனர். காலை 9:00 மணிக்கு ஒவ்வொரு படகாக கரை திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி அடுத்தடுத்து, ஐந்து படகுகள் கவிழ்ந்தன.

படகுகளில் இருந்த, 15 மீனவர்கள் கடலில் விழுந்தனர். அவர்கள் நீந்தி கரையேறி உயிர் தப்பினர். படகுகள் கவிழ்ந்ததில் அவற்றில் இருந்த, மீன்பிடி வலைகள், உபகரணங்கள், பிடித்து வரப்பட்ட மீன்கள் அலையில் அடித்து செல்லப்பட்டன. படகுகள் அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டன.

அவற்றை மீனவர்கள் டிராக்டர் உதவியுடன் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில், படகுகள் மற்றும் இன்ஜின்களும் சேதமும், பழுதும் அடைந்தன.

கடந்த 14 நாட்களில் அடுத்தடுத்து மூன்று சம்பவங்களில், ஏழு மீன்பிடி படகுகள் கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி சேதம் அடைந்துள்ளன. வலைகள் மற்றும் உபகரணங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டும் இருப்பதால், மீனவர்கள் பல லட்சம் ரூபாய் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவங்களால் மீனவ கிராமங்களில் அச்சம் நிலவுகிறது.

அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆபத்தான முறையில் தொழிலுக்கு செல்லும்போது, படகுகள் விபத்தில் சிக்கி வரும் நிலையில், மீன்வளத் துறையினர் முறையான அறிவிப்புகளை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீச்சல் அடித்து தப்பினோம்

இரண்டு மாதங்களாக தொழில் இல்லாமல் வாழ்வாதாரம் பாதித்தது. தற்போது புயல் எச்சரிக்கை முடிந்து விட்டதாக மீனவர்களிடையே தகவல் பரவியது. அதனால் நாங்களும் நேற்று அதிகாலை தொழிலுக்கு சென்றோம்.

அப்போது எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதன் பின்னரே சீற்றம் அதிகமாக இருந்ததை அறிந்து, கரை திரும்பும்போது படகுகள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகின.

படகில் இருந்தவர்கள் நீச்சல் அடித்து உயிர் தப்பினோம். இன்ஜின், படகுகள், வலைகள், மீன்கள் என, பல லட்சம் ரூபாய் பொருள்கள் நஷ்டம் ஏற்பட்டு உள்ளன. இதை நம்பியே எங்களது வாழ்வாதாரம் இருப்பதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

என். அரவிந்தன், 27,

கோரைகுப்பம் கிராமம், பழவேற்காடு.






      Dinamalar
      Follow us