UPDATED : நவ 15, 2026 08:09 PM
ADDED : நவ 15, 2026 08:06 PM
காஞ்சிபுரம்: இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் மற்றும் திருநங்கைகள் விலையில்லாத கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில், இணைய வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
ஒரு பயனாளிக்கு, தலா ஒரு கறவை மாடு வீதம், 200 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் பெண்களுக்கு, 60 வயதிற்கு மிகையாமல் இருக்க வேண்டும்.
ஏற்கனவே, மாடுகள் வைத்திருக்கூடாது; கால்நடை துறையில் வேறு எந்த ஒரு திட்டத்திலும் பயன் பெற்றிருக்க கூடாது; கறவை மாடு பராமரிக்க சவுகரியமாக இடம், தீவனம், தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
மேலும், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறநாளிகள் உள்ளிட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கால்நடை துறையினர் அறிவிப்புகளை முறையாக கடை பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
