/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசை
/
காஞ்சி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசை
ADDED : ஜன 14, 2025 12:32 AM

காஞ்சிபுரம், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன உற்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு ஆருத்ரா சிறப்பு தரிசனம் நடந்தது. தொடர்ந்து, சிவகாமி அம்மையாருடன், நடராஜ பெருமாள் வீதியுலா வந்தார்.
காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமான், சிவகாமி அம்பிகையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.
சின்னய்யங்குளம், மதுரா மோட்டூர் திருபுண்ணியநாகேச்சுரர் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு கயிலாய வாத்தியத்துடன் ஆருத்ரா நடராஜ பெருமான் திருவீதி உலா நடந்தது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில், மூலவர், அம்பிகை, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசக பெருமான் ராஜ அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிதம்பரேஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.
வரதராஜபுரம் வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் புதுப்பாளையம் தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் கோவில்களில், நேற்று மாலை 6:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடந்தது.
திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவிலில், அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு வேள்வி மற்றும் காலை 4:30 மணிக்கு, 21 வகையான அபிஷேகப் பொருட்களால் மஹா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், காலை 9:00 மணிக்கு, சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடந்தது.