/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காட்டரம்பாக்கத்தில் இரவு நேரத்தில் மண் கொள்ளை வருவாய் துறை அதிகாரிகள் மவுனம்
/
காட்டரம்பாக்கத்தில் இரவு நேரத்தில் மண் கொள்ளை வருவாய் துறை அதிகாரிகள் மவுனம்
காட்டரம்பாக்கத்தில் இரவு நேரத்தில் மண் கொள்ளை வருவாய் துறை அதிகாரிகள் மவுனம்
காட்டரம்பாக்கத்தில் இரவு நேரத்தில் மண் கொள்ளை வருவாய் துறை அதிகாரிகள் மவுனம்
ADDED : பிப் 15, 2024 10:24 PM

குன்றத்துார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் கிராமத்தில், ஏரி மற்றும் காலி நிலத்தில் இரவு நேரத்தில் மண் கொள்ளை நடக்கிறது.
சோமங்கலம் காவல் நிலைய எல்லையில், காட்டரம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம எல்லையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதி மற்றும் நீர் செல்லும் கால்வாய் உள்ளது.
இந்த கிராமத்தில் வீடுகளின்றி காலியாக, பல ஏக்கர் பட்டா நிலங்கள் உள்ளன. வெளியூர்வாசிகள் பலர் இந்த இடத்தை வாங்கி, எல்லைக்கல் நட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், காட்டரம்பாக்கம் எல்லையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி பகுதி, தனியாருக்குச் சொந்தமான காலி நிலங்களில், இரவு நேரத்தில் மண் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, குன்றத்துார் சுற்றுப்பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு நிலத்தை சமன்படுத்த, அதிக அளவு மண் தேவைப்படுகிறது.
இதனால், காட்டரம்பாக்கம் பகுதியில் ஏரி மற்றும் காலி நிலங்களில், இரவு நேரத்தில் 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, லாரிகளில் மண் கொள்ளை கனஜோராக நடந்து வருகிறது. சோமங்கலம் போலீசார், வருவாய் துறையினர் இந்த மண் கொள்ளையை கண்டும் காணாமல் உள்ளனர்.
மண் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.