ADDED : ஆக 18, 2025 02:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 39வது ஆண்டு மாவட்ட அளவிலான தடகள போட்டிநடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியை காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், தடகள சங்க மாவட்டத் தலைவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாஸ்கர பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் தொழிலதிபர்கள் பொன்னம்பலம், கார்த்திகேயன், மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் வழக்கறிஞர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தடகள போட்டி, 14, 16, 18, 20 வயது ஆண்கள், பெண்கள் என, இரு பிரிவில், ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், மெடல் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், வண்டலுாரில் செப்., மாதம் இறுதியில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது என, காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்க செயலர் திருவளர் செல்வன் தெரிவித்தார்.