ADDED : பிப் 04, 2024 06:12 AM
சென்னை : மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை தடுக்க, 200 மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவர்கள், படியில் தொங்கி பயணம் செய்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க, முதற்கட்டமாக 200 பஸ்களுக்கு, முன், பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவதற்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், படிக்கட்டு பகுதியில் உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்குவதை தடுக்க, முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே, ஜன்னல்களுக்கு நிரந்தர கண்ணாடி பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால், நடத்துனர் அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி, உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து, ஆபத்தான முறையில் பயணம் செய்தால், அருகில் உள்ள போக்குவரத்து போலீசார் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.