தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/8 ஊராட்சிகளில் கட்டுமான பணிகளுக்கான தடை நீக்கம்!பரந்துார் ஏர்போர்ட் திட்டம் ரத்தால் சலுகை

8 ஊராட்சிகளில் கட்டுமான பணிகளுக்கான தடை நீக்கம்!பரந்துார் ஏர்போர்ட் திட்டம் ரத்தால் சலுகை

8 ஊராட்சிகளில் கட்டுமான பணிகளுக்கான தடை நீக்கம்!பரந்துார் ஏர்போர்ட் திட்டம் ரத்தால் சலுகை


UPDATED : செப் 06, 2026 05:10 AM

ADDED : செப் 05, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 05:10 AM ADDED : செப் 05, 2026 08:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டதால், எட்டு ஊராட்சிகளில் நிரந்தர கட்டமான பணிகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கட்டடம், சாலைகள் உள்ளிட்ட வசதிகள் நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின், இரண்டாவது விமான நிலையம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 12 கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமானவை. மற்றவை தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள்.

இதில், தனியாருக்கு சொந்தமான 60 சதவீதம் நிலங்களை, தமிழக தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்தியது. இருப்பினும், பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக, சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.

விமான நிலைய திட்டத்தால், வாலாஜாபாத் ஒன்றியத்தில் பரந்துார், தண்டலம், வளத்துார், மேல் பொடவூர் ஆகிய நான்கு ஊராட்சிகள்; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் ஏகனாபுரம், குணகரம்பாக்கம், அக்கமாபுரம், எடையார்பாக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகள் என, மொத்தம் எட்டு ஊராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊராட்சிகளில், குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை தவிர, பிற நிரந்தரமான கட்டடம் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மேற்கண்ட கிராமத்தினர் சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகள் இன்றி பரிதவிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டுள்ளதால், எட்டு ஊராட்சிகளில், நிரந்தர கட்டுமான பணிகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, மேற்கண்ட எட்டு ஊராட்சிகளில், சாலை, புதிய கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேறும் என, மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஏகனாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது:

பரந்துார் விமான நிலைய திட்டத்தால், குடிநீர், குளம் வெட்டுதல் ஆகிய சில பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினர். நிரந்தர கட்டடம், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்ய முடியாத நிலை இருந்தது.

ஏகனாபுரத்திற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலை இருந்தது.

இப்போது, பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளதால், வழக்கம் போல பணிகள் செய்ய, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான தென்னரசு, தேவையான நிதியை ஒதுக்கி, வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் ஆசிக் அலி கூறியதாவது:

பரந்துார் விமான நிலைய திட்டம் அறிவிக்கும் முன்பிருந்தே, அனைத்து விதமான வசதிகளும் ஊராட்சிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கடந்த ஆட்சியுடன் முடிந்து விட்டது. புதிய அரசின் திட்டம் ஏதேனும் வந்தால், அந்த திட்டத்தில் ஊராட்சிளுக்கு தேவையான பணிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us