/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதசாரிகள் கடக்கும் சிக்னல் விளக்கை மறைத்து வைத்த பேனரால் விபத்து அபாயம்
/
பாதசாரிகள் கடக்கும் சிக்னல் விளக்கை மறைத்து வைத்த பேனரால் விபத்து அபாயம்
பாதசாரிகள் கடக்கும் சிக்னல் விளக்கை மறைத்து வைத்த பேனரால் விபத்து அபாயம்
பாதசாரிகள் கடக்கும் சிக்னல் விளக்கை மறைத்து வைத்த பேனரால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 12:34 AM

உத்திரமேரூர்:-திருப்புலிவனத்தில் பாதசாரிகள் சாலையை கடக்க வைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்கை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் சாலை, திருப்புலிவனம் பகுதியில், டாக்டர்.எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த கல்லுாரிக்கு வரும் மாணவ -- மாணவியர் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் பேருந்து மூலமாக வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் மாணவ - - மாணவியர் கல்லுாரி எதிரே உள்ள சாலையை கடக்க சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, சில ஆண்டுக்கு முன் சாலையின் குறுக்கே பாதசாரிகள் செல்லும் பாதை ஏற்படுத்தப்பட்டு, அவர்களே பட்டன் அழுத்தி இயக்கும் விதமாக சாலையின் இருபுறமும் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன.
சமீப நாட்களாக, இந்த சிக்னல் விளக்குகளை மறைத்து அரசியல் கட்சி, திருமணம், பிறந்தநாள் ஆகியவற்றின் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், கல்லுாரிக்கு வரும் மாணவ -- மாணவியர் சாலையை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
சிக்னல் விளக்குகளை பேனர் மறைத்து இருப்பதால், பாதசாரிகள் சிக்னல் பட்டனை இயக்கியும் விளக்குகள் எரிவது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் எப்போதும் வேகமாக செல்வதால் சாலையை கடக்க முயல்வோர் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
பாதசாரிகள் சிக்னல் விளக்கை மறைத்து பேனர் வைப்போர் மீது, நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
எனவே, சிக்னல் விளக்குகள் மீது வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

