/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் போகிப்பண்டிகை உற்சாகம்
/
காஞ்சியில் போகிப்பண்டிகை உற்சாகம்
ADDED : ஜன 15, 2024 04:01 AM

காஞ்சிபுரம், : மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று, காஞ்சிபுரம் வட்டாரத்தில் போகி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இதில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கூற்றுக்கேற்ப, வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை, வீட்டு வாசல் முன் குவித்து, தீயிட்டு எரித்து, போகி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அப்போது, எரியும் தீயை சுற்றிலும் பெரியவர்கள் அமர்ந்து குளிர்காய, சிறுவர்கள் போகி மேளத்தை கொட்டிவாறு போகியோ, போகி என, கூச்சலிட்டு, உற்சாகத்துடன் போகிபண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
எரிக்கப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட புகை மண்டலத்துடன், பனிப்பொழிவும் நிலவியதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று, காலை 9:00 மணியை கடந்தும் புகை மூட்டமாக இருப்பதை காண முடிந்தது.
குன்றத்துார் சுற்றுவட்டாரத்தில் போகி பண்டிகை உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது.
அதிகாலை 4:00 மணிக்கு வீட்டின் வாசலில் தீ மூட்டி மார்கழி குளிருக்கு இதமாக பெரியவர்கள் குளிர்காய, சிறுவர்கள் மேளம் அடித்து மிகுந்த உற்சாகத்துடன் போகியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
போகி தீயில் வெளியேறிய புகையால், குன்றத்துார், மாங்காடு, சோமங்கலம், படப்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் காலை 8:00 மணி வரை புகை மூட்டமாக காணப்பட்டது.
வாலாஜாபாத் சுற்றுவட்டாரத்தில நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், கடுமையான குளிரிலும் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். காலை 8:30 மணி வரை தெருக்கள் மற்றும் சாலைகளில் ஆட்கள் தெரியாத வண்ணம் பனிப்பொழிவு இருந்தது.
இதனால், வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள், காலை 9:00 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.