/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொளப்பாக்கத்தில் குவியும் பறவைகளால் விமானங்களின் சேவைக்கு அச்சுறுத்தல் குப்பை கழிவு கொட்டாதீர்: ஊராட்சிக்கு எச்சரிக்கை

ADDED : மார் 27, 2025 12:55 AM

சென்னை விமான நிலையம், மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது, அதை சுற்றி கவுல்பஜார், கொளப்பாக்கம், பொழிச்சலுார், தரைப்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. கொளப்பாக்கம் அண்ணா பிரதான சாலை பின்புறத்தில் உள்ள காலி இடத்தில், அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பை, மாமிச கழிவு கொட்டப்படுகின்றன.
இதனால், கால்நடைகள் மற்றும் பறவைகள் அங்கு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அருகில் உள்ள விமான நிலையத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாக உணவு தேடி வரும் பறவைகள், எளிதில் விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
தரையிறங்கும் அல்லது பறக்கும் விமானங்களில் பறவைகள் மோதும் நிலை ஏற்பட்டால், விபத்து தவிர்க்க முடியாததாகி விடும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக விமான நிலையம் சுற்றியுள்ள இடங்களில், எவ்வித குப்பையும் கொட்டக் கூடாது. அப்படி கொட்டினால் பறவைகள் எளிதாக உள்ளே வந்துவிடும்.
விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும் சிக்கலை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன.
இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சில வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகள், விமான நிலையம் அருகில் குப்பை கொட்டக் கூடாது என, ஒவ்வொரு மாதமும் அழைத்து பேச்சு நடத்துகிறோம்.
அதையும் மீறி, கொளப்பாக்கம் ஊராட்சியில் இருந்து தினமும் டன் கணக்கில் குப்பையை, விமான நிலைய ஓடுபாதை பின்புறத்தில் உள்ள இடங்களில் கொட்டுகின்றனர். இதனால், அதில் கிடைக்கும் உணவுகளுடன் பறவைகள், விமான நிலையத்திற்குள் வருகின்றன.
ஆணையம் சார்பில் பறவைகளை விரட்டுவதற்கான ஆட்கள் நியமிக்கப்பட்டு, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைப்பு இருந்தால் தான், இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -