/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சியில் லஞ்ச, லாவண்யம்...அதிகரிப்பு: ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் சிக்கினர்
/
காஞ்சி மாநகராட்சியில் லஞ்ச, லாவண்யம்...அதிகரிப்பு: ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் சிக்கினர்
காஞ்சி மாநகராட்சியில் லஞ்ச, லாவண்யம்...அதிகரிப்பு: ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் சிக்கினர்
காஞ்சி மாநகராட்சியில் லஞ்ச, லாவண்யம்...அதிகரிப்பு: ஒன்றரை ஆண்டுகளில் நான்கு பேர் சிக்கினர்
ADDED : ஏப் 24, 2025 08:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், போலீசிடம் தொடர்ந்து சிக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு அதிகாரிகள் லங்சம் வாங்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில், காஞ்சிபுரம் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. கோவில் நகரம், பாரம்பரிய நகரம் என்ற பெயர்கள் பெற்றிருந்தாலும், நிர்வாக ரீதியில், சொத்துவரி வசூலிப்பதில் முதன்மை மாநகராட்சியாக உள்ளது. ஆனால், நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகளால், அடிக்கடி காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, நிர்வாக சீர்கேடு இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் சிக்கியபடியே உள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது தெரியவந்து, சமீப காலத்தில் இரு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், வரி விதிப்பு, இறப்பு சான்றிதழ் என, எந்த சேவைக்கும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்காமல், நகரவாசிகளால் சேவையை இலவசமாக பெறவே முடியாத நிலை உள்ளது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மட்டுமல்லாமல், அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும் பல மடங்கு தொகை, லஞ்சமாக கொடுத்தால்தான், வேலை நடப்பது அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய நான்கு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2023 ஆகஸ்டில், காஞ்சிபுரம் மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். 2024 ஆகஸ்டில் நகரமைப்பு பிரிவில் பணியாற்றிய நகரமைப்பு ஆய்வாளர் ஷ்யாமளா என்பவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 73 லட்ச ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி பிட்டர் கண்ணன் என்பவர், வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, குடிநீர் விநியோகம் செய்ய தடையில்லா சான்று கேட்ட சரவணன் என்பவரிடம், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் என்பவர், 5,000 ரூபாய் கேட்டுள்ளார். லஞ்ச பணத்தை சுகாதார ஆய்வாளர் பெறும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த நான்கு சம்பவங்கள் மட்டுமல்லாமல், கமிஷனர்கள், நகர நிலவரி திட்ட அலுவலக அதிகாரிகள் மீதும் கடந்தாண்டுகளில் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாநகராட்சி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கும் போது அதிகாரிகள் பிடிபடுவது, நகரவாசிகளுக்கு, நிர்வாகம் மீதான நம்பிக்கை தொடர்ந்து குறைகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முக்கிய வருவாயை வழங்கும், வரி விதிப்பு பிரிவை வருவாய் பிரிவு என்கின்றனர். இந்த வருவாய் பிரிவில், பல ஆண்டுகளாக, வரி விதிப்பு அலுவலர்கள் ஒரே இடத்தில் பணியாற்று கின்றனர்.
ஒரே இடத்தில் பணியாற்றுவதால், சரியான வரி விதிப்பு செய்வது இல்லை எனவும், லஞ்சம் பெற ஏதுவதாகவும் இருப்பதாக புகார் எழுகிறது. வருவாய் பிரிவில் உள்ள வரி விதிப்பு அலுவலர்களை, இடமாற்றம் செய்வது இப்போதைய சூழலுக்கு அவசியமாகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிலவும் லஞ்ச லாவண்யத்தை, குறைக்க வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.