ADDED : மே 14, 2026 03:31 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - திருத்தணி நான்குவழி சாலையில், தக்கோலம் - தணிகைபோளூர் இடையே, புறவழி சாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இதன், 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழி சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், காஞ்சிபுரம் முதல் பரமேஸ்வரமங்கலம் வரையில், 22 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கூட்டு சாலையில் இருந்து, அரக்கோணம் புறவழியில், பை பாஸ் சாலை தணிகைபோளூர் வரையில் அமைகிறது. இந்த, 17 கி.மீ., துாரம் சாலை, சிறுபாலங்கள் கட்டும் பணி, தார் சாலை போடும் பணி நிறைவு பெற்றுள்ளது.
தக்கோலம் கூட்டு சாலை ரயில்வே மேம்பாலம் மற்றும் சித்தேரிமேடு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பணிகள் நிறைவு பெற்றால், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக திருத்தணி வரை செல்லும் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல வழி வகுக்கும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
