/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெளிநாட்டு பறவைகள் அல்லாபாத் ஏரியில் முகாம்
/
வெளிநாட்டு பறவைகள் அல்லாபாத் ஏரியில் முகாம்
ADDED : பிப் 08, 2025 12:20 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேட்டில் இருந்து சின்ன காஞ்சிபுரம் சி.எஸ்., செட்டி தெருவிற்கு செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரி 100 ஏக்கர் 65 செண்டில் அமைந்துள்ளது .
மாநகராட்சி எல்லைக்குள் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், திருக்காலிமேடு, திருவீதிபள்ளம், நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் விவசாயம் செய்து வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரியில் சீமை கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்துள்ளன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏரியில் மழைநீர் தேங்கியுள்ளதால் வெளிநாட்டு பறவைகள் ஏரியில் தஞ்சமடைந்துள்ளன.
ஏரிக்கரை ஒட்டியுள்ள சாலை வழியாக செல்வோர் மினி பறவைகள் சரணாலயாக மாறியுள்ள அல்லாபாத் ஏரியில் உள்ள பறவைகளை பார்வையிட திருக்காலிமேடு, கே.எம்.அவென்யூ, சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதியினர் வந்து செல்கின்றனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பாகிஸ்தான், இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் சீசன் நேரத்தில் முதலில் வருவது நத்தி குத்திநாரை பறவைகள் தான்.
இப்பறவைகளில் சில, காஞ்சிபுரத்தில் உள்ள அல்லாபாத் ஏரிக்கரை இயற்கை சூழல் சாந்துள்ளதால், அங்கு தஞ்சமடைந்துள்ளன.
அக்டோபர் மாதத்தில் இங்கு வரும் இப்பறவைகள், இனப்பெருக்கம் செய்து மார்ச் மாதத்தில் தன் குஞ்சுகளுடன் திரும்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.