/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாசடைந்த கொரட்டூர் ஏரி மேம்படுத்தப்படுமா?
/
மாசடைந்த கொரட்டூர் ஏரி மேம்படுத்தப்படுமா?
ADDED : மார் 11, 2024 04:39 AM

அம்பத்துார், : 'சுற்றுவட்டார பகுதிகளின் துாய்மையான நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக, தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து வரும் கொரட்டூர் ஏரியை மேம்படுத்த, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலத்தில், நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில், 590 ஏக்கர் பரப்பளவில் கொரட்டூர் ஏரி உள்ளது.
இந்த ஏரி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவியது.
ஆனால், நாளடைவில் மண்டலம் முழுக்க அதிகரித்த தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் மாசடைய துவங்கியது.
இது தவிர, மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புது மழைநீர் வடிகால்களிலும் விதிமீறி கழிவுநீர் விடப்படுகிறது. இதுவும் ஏரிக்குள் பாய்கிறது.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவ மழையின் போது, ஏரி முழு கொள்ளளவிற்கு நிரம்பியது. ஆனால், ஒரு சில மாதங்களில் ஏரி வறண்டு வருகிறது.
இதற்கு காரணம், ஏரியை முறையாக துார் வாரி, கரை மற்றும் கலங்கலின் உயரத்தை அதிகரித்து, கழிவுநீரை தடுக்காத நீர்வள ஆதாரத்துறையின் பொறுப்பின்மை தான் காரணம் என, நீர்நிலை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணெய் கழிவுகளால், அடர்த்தியான பாசி படர்ந்து, ஏரியின் தன்மை, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
'ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஏரியை துார் வாரி நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக மேம்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் உட்பட, சுற்றுவட்டார நீர்நிலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், ஏழு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால், நீர்வள ஆதாரத்துறையின் அலட்சியத்தால், இந்த ஏரி, நீராதாரத்திற்கான தகுதியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், அரசு துறைகளின் அலட்சியத்தால், நீர்நிலைகளின் மேம்பாடு, 'கானல் நீராகி' விடுகிறது.
இனியாவது, கொரட்டூர் ஏரியின் மேம்பாட்டில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

