/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் பணி அரைகுறை நெ.சா.துறையினர் மெத்தனம்
/
கால்வாய் பணி அரைகுறை நெ.சா.துறையினர் மெத்தனம்
ADDED : டிச 29, 2024 01:11 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து வேடபாளையம், மானாம்பதி வழியாக, காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், வந்தவாசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்த சாலை இருவழிச்சாலையாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்தாண்டு, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துவக்கப்பட்டு, இருபுறமும் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது, வேடபாளையத்தில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகம் அருகே செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி, அரைகுறையாக விடப்பட்டுள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி வடிகால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், வடிகால்வாய் அருகே உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதை மற்றும் வேளாண் இடுபொருட்களை பெற, வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
அப்போது, வாகனங்களை பின்னோக்கி எடுத்து, நெடுஞ்சாலையில் ஏற முயலும்போது, திறந்தநிலை வடிகால்வாயில் விழுந்து, விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வடிகால்வாயை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
எனவே, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

