தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் 4 ஆண்டுகளில் 6 மாநகராட்சி கமிஷனர்கள் மாற்றம்!: 6 மாதங்களில் மாறுவதால் வளர்ச்சி பணிகளில் சுணக்கம்

காஞ்சியில் 4 ஆண்டுகளில் 6 மாநகராட்சி கமிஷனர்கள் மாற்றம்!: 6 மாதங்களில் மாறுவதால் வளர்ச்சி பணிகளில் சுணக்கம்

காஞ்சியில் 4 ஆண்டுகளில் 6 மாநகராட்சி கமிஷனர்கள் மாற்றம்!: 6 மாதங்களில் மாறுவதால் வளர்ச்சி பணிகளில் சுணக்கம்


UPDATED : செப் 18, 2026 08:04 PM

ADDED : செப் 18, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2026 08:04 PM ADDED : செப் 18, 2026 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2022 முதல் தற்போது வரை நான்கு ஆண்டுகளில், ஆறு மாநகராட்சி கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பணியாற்றி வந்த மாநகராட்சி கமிஷனர் வினோத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கமிஷனர் உடனுக்குடன் பணியிட மாறுதல் செய்யப்படுவதால், வளர்ச்சி திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி, 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் மக்கள் தொகை பெருக்கம், விரிவாக்க பகுதிகளின் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், மாநகராட்சியின் பொறுப்புகளும், பணிச்சுமையும் அதிகரித்தது.

இதற்கேற்ப, குடிநீர், பாதாள சாக்கடை, சாலை, மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு, பூங்காக்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், மாநகராட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்பான கமிஷனர் பதவியில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், திட்டங்களின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு முதல் தற்போதைய காலகட்டம் வரை, நான்கு ஆண்டுகளில் ஆறு கமிஷனர்கள் மாறியுள்ளனர். 2022ல், நாராயணன் என்பவரும், அவரை தொடர்ந்து கண்ணன், செந்தில்முருகன், நவேந்திரன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த மே மாதம் காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனராக பணியில் சேர்ந்த வினோத், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேலுார் மாநகராட்சியில் இருந்து, சுல்தானா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமிஷனர் தொடங்கி வைத்த பணியை, அடுத்த கமிஷனர் தொடர்ந்து செயல்படுத்தினாலும், புதிய அதிகாரி மீண்டும் கோப்புகளை ஆய்வு செய்வது, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பது, ஒப்பந்த விபரங்களை சரிபார்ப்பது, பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வது என, நிர்வாக நேரம் செலவாகிறது. இதனால், திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரை, 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநகராட்சி பொறியாளர், சுகாதார அலுவலர் என, முக்கிய பதவியிடங்கள் காலியாக உள்ளன. முக்கிய பிரச்னைகளுக்கு நீண்ட கால தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறிப்பாக, வேகவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்புகள், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் பழுதுகள், குடிநீர் தட்டுப்பாடு, மழைநீர் தேக்கம், போக்குவரத்து நெரிசல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, ஒரு சில மாதங்களில் தீர்வு காண முடியாது.

இதுபோன்ற சூழலில், மாநகராட்சி கமிஷனர் பதவியில் அடிக்கடி அதிகாரிகள் மாற்றப்படுவது, நீண்ட கால திட்டங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

எனவே, முக்கியமான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறும் வரை, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என, காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us