/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கை - அரக்கோணம் இருப்புப்பாதை இருவழியாக்க.. ரூ. 1,538 கோடி ரயில் பயணியர் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்
/
செங்கை - அரக்கோணம் இருப்புப்பாதை இருவழியாக்க.. ரூ. 1,538 கோடி ரயில் பயணியர் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்
செங்கை - அரக்கோணம் இருப்புப்பாதை இருவழியாக்க.. ரூ. 1,538 கோடி ரயில் பயணியர் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்
செங்கை - அரக்கோணம் இருப்புப்பாதை இருவழியாக்க.. ரூ. 1,538 கோடி ரயில் பயணியர் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்
ADDED : அக் 22, 2025 10:10 PM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு - அரக்கோணம் ஒரு வழி ரயில் பாதையை, இருவழிப் பாதையாக மாற்ற, 1,538 கோடி ரூபாய் நிதி கேட்டு, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு, சென்னை கோட்ட ரயில் நிர்வாகம் அறிக்கை அனுப்பி உள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையம் வழியாக காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வரை, 10 மின்சார ரயில்கள் மற்றும் வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு இரண்டு மின்சார ரயில்களும், செங்கல்பட்டு வரை ஒரு மின்சார ரயிலும் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு - அரோக்கோணம் வரை 68 கி.மீ.,க்கு ரயில்வே இருப்புப்பாதை, ஒரு வழிப்பாதையாக உள்ளது. இந்த இருப்புப்பாதையில் செங்கல்பட்டு, ரெட்டிப்பாளையம், பாலுார், பழையசீவரம், வாலாஜாபாத், நத்தப்பேட்டை, காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம் வரை, ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.
இதில் பாலுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகியவை முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களில் பலர், சென்னை தலைமை செயலகம், உயர் நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், தினமும் மின்சார ரயில்களில் சென்று, மீண்டும் இதே ரயில்களில் வீடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனர். இதுமட்டும் இன்றி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு, ஊழியர்கள் பலர் ரயிலில் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், மின்சார ரயில்களில், தினமும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இதுமட்டும் இன்றி, காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த சுற்றுலாதலமாக இருப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ரயில்வே இருப்புப்பாதை ஒரு வழி பாதையாக இருப்பதால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாமல் உள்ளது.
இதுமட்டுமின்றி விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் ஒரு வழியில் செல்லும் போது அவற்றுக்கு வழிவிட பாலுார், வாலாஜாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நிறுத்தப்படும். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணியர் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ரயில்வே இருப்புப்பாதையை இருவழிப் பாதையாக மாற்றக்கோரி, நீண்ட காலமாக ரயில் பயணியர், ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்து வந்தனர்.
இதுமட்டும் இன்றி மாலை நேரங்களில், எதிரே வரும் ரயில்களுக்காக, மின்சார ரயில்கள் பாலுார் ரயில் நிலையம் அருகில் நிறுத்தப்படுகின்றன.
இங்கு நீண்ட நேரம் ரயில் நிற்பதால், பாதிக்கப்பட்ட ரயில் பயணியர் அடிக்கடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக பயணியரிடம் உறுதி அளிக்கின்றனர். ஆனால், ரயில்வே இருப்புப்பாதை இருவழியாக மாற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ரயில்வே இருப்புப்பாதையை, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின், ரயில்வே இருப்புப் பாதையை இருவழியாக மாற்ற, சென்னை ரயில்வே கோட்டம், 1,538 கோடி ரூபாய் நிதி கேட்டு, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த செப்., மாதம் அறிக்கை அனுப்பி உள்ளது.
இதன்படி, இரண்டாவது ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரயில்கள் இயக்கும் இடத்தில், 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும்.
பயணியர் ரயில் மட்டுமின்றி, சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

