/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிப்காட் பகுதிகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி திணறல்: சாலை, மின் விளக்கு பராமரிக்காத அவலம்
/
சிப்காட் பகுதிகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி திணறல்: சாலை, மின் விளக்கு பராமரிக்காத அவலம்
சிப்காட் பகுதிகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி திணறல்: சாலை, மின் விளக்கு பராமரிக்காத அவலம்
சிப்காட் பகுதிகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி திணறல்: சாலை, மின் விளக்கு பராமரிக்காத அவலம்
ADDED : அக் 03, 2025 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் வடகால், ஒரகடம் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில், வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான, வாகன நிறுத்தம், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஒரகடம், வல்லம் -வடகால் ஆகிய பகுதிகளில் ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் செயல்படுகின்றன. தவிர, மருத்துவ சாதனங்கள் பூங்கா, வானுார்தி பூங்கா உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட, 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்குள்ள தொழிற்சாலைகளின் வாயிலாக ஆண்டுக்கு 70,000 கோடிக்கு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே போல, சிப்காட் நிலங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், சராசரியாக ஆண்டிற்கு 1,000 கோடி ரூபாய் சிப்காட் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்துகிறது.
இருந்தும் சிப்காட் அமைந்துள்ள பகுதிகளில், சாலை, மின் விளக்கு, வாகன நிறுத்த முனையம் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி செல்லவும், தமிழகம் உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
இங்கு வரும் வெளி மாநில கனரக வாகனங்கள், கொண்டுவந்த பொருட்களை இறக்கவும், உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லவும், பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
அவ்வாறு வரும் வாகனங்களை நிறுத்த, ஒரகடம், வல்லம் -வடகால், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில் கனரக வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளன.
முறையான பராமரிப்பு இல்லாததால், கனரக வாகன நிறுத்த முனையத்தில், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பல கோடி செலவில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் முடங்கி உள்ளன. இதனால், சாலையோரங்களில் வரிசைக்கட்டி நிற்கும் கனரக வாகனங்களால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துக்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
மேலும், சிப்காட் சாலைகள், தெரு மின் விளக்கு உள்ளிட்டவை பராமரிப்பதில் நிர்வாகம் பாராமுகம் காட்டி வருகிறது. இதனால், சிப்காட் சாலைகளை பயன்படுத்தி வரும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, சிப்காட் சாலைகளில் மின்விளக்கு எரியாததால், இரவு நேரங்களில் பணி முடிந்து சிப்காட் சாலைகளில் செல்லும் தொழிலாளர்கள், கும்மிருட்டான சாலையில் செல்லும் போது, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அதேபோல, உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியில், தமிழக அளவில் முதல் இடத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது, புதிதாக தொழிற்சாலை துவங்க நினைக்கும் நிறுவனங்களுக்கு பல சங்கடங்களை உருவாக்கி வருகின்றன.
எனவே, ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள் சிப்காட் பகுதிகளில் தேவையான வசதிகளை பூர்த்தி செய்ய, சிப்காட் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து சிப்காட் அதிகாரி ஒருவர் கூறியதாவது;
சேதமான சிப்காட் சாலைகள் அவ்வப்போது சிரமைக்கப்பட்டு வருகின்றன. சிப்காட் சாலைகளில் எரியாமல் உள்ள தெரு மின் விளக்குகள் சரி செய்யப்படும். வல்லம் - வடகால் சிப்காட்டில் உள்ள கனரக வாகன நிறுத்த முனையம், ஒப்பந்த காரணங்களால் நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்தது.
தற்போது வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் வாகன நிறுத்தத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.