/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் மாற்றி பழுது நீக்குவதற்கு பணம் வசூலிப்பு விவசாயிகளிடம் திரும்ப செலுத்த கலெக்டர் உத்தரவு
/
மின் மாற்றி பழுது நீக்குவதற்கு பணம் வசூலிப்பு விவசாயிகளிடம் திரும்ப செலுத்த கலெக்டர் உத்தரவு
மின் மாற்றி பழுது நீக்குவதற்கு பணம் வசூலிப்பு விவசாயிகளிடம் திரும்ப செலுத்த கலெக்டர் உத்தரவு
மின் மாற்றி பழுது நீக்குவதற்கு பணம் வசூலிப்பு விவசாயிகளிடம் திரும்ப செலுத்த கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 18, 2025 10:34 PM
காஞ்சிபுரம்:மின் மாற்றி பழுது நீக்குவதற்கு, மின் வாரிய அதிகாரிகள் பணத்தை வசூலிப்பதாக, விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வசூலித்த பணத்தை, மின் வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் திரும்ப செலுத்த வேண்டும் என, கலெக்டர் குறை தீர் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
நேரு, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலர்: விச்சந்தாங்கல் கிராமத்தில், மின் மாற்றி பழுதுக்கு பணம் வசூலிக்கின்றனர். பழுதிற்கு, 11,000 ரூபாய் பணம் செலவழித்தும் மின் மாற்றி அமைக்கவில்லை ஏன் .
கலெக்டர், கலைச்செல்வி: வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, மின் மாற்றியை விரைந்து சரி செய்து கொடுங்கள்.
விவசாயி, உத்திரமேரூர்: கடந்த ஆண்டு வழங்கிய, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடனை செலுத்த முடியாதவர்களுக்கு, இந்த ஆண்டு புதுப்பித்து கொடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில், நகை மீது அடமானக்கடன் வழங்குவதில்லை.
ஜெயஸ்ரீ, மண்டல இணைப்பதிவாளர்: மத்திய கூட்டுறவு கடன் சங்கத்தில் மட்டுமே கடன் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயி, அவளூர்:
அவளூர் ஏரி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஏரிக்கு தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
பொதுப்பணி துறை பொறியாளர், காஞ்சிபுரம்: ஆண்டுதோறும் தற்காலிக ஏற்பாடு மட்டுமே செய்ய முடிகிறது.
நிரந்திர தீர்வுக்கு போதிய நிதி இல்லாததால், செய்ய முடியவில்லை. இருப்பினும், நிதி கேட்டு பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு பேசினர்.

