/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 25, 2025 01:51 AM

காஞ்சிபுரம்:தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பாலுச்செட்டிச்சத்திரம், திருப்புட்குழி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தை கடந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. திருப்புட்குழி, பாலுச்செட்டிச்சத்திரம் கிராமங்களில் வசிப்போர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்தில் பலரும் இறக்கின்றனர். பலர் காயமடைகின்றனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலை கீழ், கார், பைக், விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் டிராக்டர் போன்ற வாகனங்கள் சென்று வர, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்புட்குழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ - மாணவியரும் அன்றாடம் ஆபத்தான சூழலில் சாலையை கடக்கின்றனர்.
சுரங்கப்பாதை அமைத்தால், எளிதாக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியும். இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், சுரங்கப்பாதை அமைக்காததால், பாலுச்செட்டிச்சத்திரம், திருப்புட்குழி கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் வந்து, திடீரென முற்றுகை போராடடம் நடத்தினர்.
கலெக்டர் வளாகத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள், அடுத்தகட்டமாக, கலெக்டரின் அறை முன் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.
தாலுகா போலீசார் கிராம மக்களிடம் பேசியும் அங்கிருந்து யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து, கலெக்டர் கலைச்செல்வி, கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார்.
சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர்.