/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கட்டடம்...அட்டூழியம்!:நீர்வழித்தடத்திற்கு பட்டா கொடுத்த தாசில்தார் யார்?
/
காஞ்சியில் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கட்டடம்...அட்டூழியம்!:நீர்வழித்தடத்திற்கு பட்டா கொடுத்த தாசில்தார் யார்?
காஞ்சியில் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கட்டடம்...அட்டூழியம்!:நீர்வழித்தடத்திற்கு பட்டா கொடுத்த தாசில்தார் யார்?
காஞ்சியில் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கட்டடம்...அட்டூழியம்!:நீர்வழித்தடத்திற்கு பட்டா கொடுத்த தாசில்தார் யார்?
ADDED : நவ 09, 2024 12:02 AM

காஞ்சிபுரம்:நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றங்களும், தமிழக அரசும் உத்தரவிட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில், மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் மீது நடவடிக்கை இன்றி உள்ளது. மேலும், கால்வாய்க்கு பட்டா வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பதால், பட்டா வழங்கிய தாசில்தார் பற்றி வருவாய் துறை விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கக் கூடாது எனவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் வாயிலாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஏராளமான நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், நகரின் மையத்தில் உள்ள மேட்டுத் தெருவை கடந்து செல்லும் மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாயை மறித்து, புதிதாக பிரமாண்ட கட்டடத்தை தனிநபர் கட்டியுள்ளார்.
கால்வாயை மறித்து கட்டி வந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் பற்றி மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னும், கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்டுமான பணிகளை முடித்து, வணிக ரீதியில் கடை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள இந்த புதிய கட்டடத்திற்கு, மின் வாரிய அதிகாரிகள் புதிதாக மின் இணைப்பு வழங்கியிருப்பது, அப்பகுதியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எந்தவித மின் இணைப்பும் வழங்கக் கூடாது என, தமிழக மின் வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார். இந்நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், நீர்நிலைகளுக்கு மின் இணைப்பு வழங்குவது அதிகரித்துள்ளது.
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து புதிதாக கட்டடம் கட்டியிருப்பதால், வெள்ளத்தின்போது மழைநீர் வெளியேற முடியாமல் மேட்டுத் தெரு, மூங்கில் மண்டபம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிஉள்ளது.
புதிய கட்டடத்தின் கட்டுமான கழிவுகளை, மழைநீர் கால்வாயில் கொட்டி, மழைநீர் செல்ல முடியாமல் செய்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள், சர்வேயர் மூலம் மழைநீர் கால்வாயை அளந்து, எத்தனை அடி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என, ஆய்வு நடத்த வேண்டும். இந்த கட்டடத்தின் எதிர்புறம், மழைநீர் கால்வாய் தெரியாத அளவுக்கு பெரிய அளவிலான கட்டடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த கட்டடங்கள் மீதும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேட்டுத் தெரு மழைநீர் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என, தமிழ் மக்கள் பண்பாட்டு கழகத்தின் தலைவர் கோ.ரா.ரவி என்பவர், கடந்த 10 ஆண்டுகளில், 50 முறைக்கு மேலாக மனு அளித்துள்ளார்.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கால்வாயை பலரும் ஆக்கிரமித்து, நாளடைவில் கால்வாயே இல்லாத சூழல் ஏற்படும். நீர்நிலை என தெரிந்தே மேட்டுத் தெரு கால்வாய்க்கு பட்டா கொடுத்த வருவாய் துறை தாசில்தார் யார் என்ற கேள்வி, மேட்டுத் தெருவாசிகளிடையே எழுந்துள்ளது.
எனவே, நீர்நிலைக்கு பட்டா வழங்கியிருந்தால், அது தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்த வேண்டும்.
ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் எழுந்த கட்டடத்திற்கு, 'நோட்டீஸ்' அளித்து விட்டோம். அவர்கள் பட்டா மற்றும் பத்திரம் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அவை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
- நவேந்திரன், மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம்
தற்காலிக மின் இணைப்பு மட்டுமே அவர்களுக்கு வழங்கியுள்ளோம். பட்டா வைத்திருப்பதாக அவர்கள் எங்களுக்கு ஆவணம் கொடுத்துள்ளனர். அதனால் தான் நாங்கள் இணைப்பு கொடுத்துள்ளோம்.
- மின் வாரிய பொறியாளர், காஞ்சிபுரம்