ADDED : மார் 19, 2024 03:48 AM

ஒரகடம் சிப்காட்டில்
குடிநீர் வீண்
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில், சிப்காட் நிறுவனத்தின் வாயிலாக, டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிப்காட் வாகன நிறுத்த முணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், நாள்தோறும் இதில் குளித்து வருகின்றனர்.
இதனால், ஆயிரக்கணக்கான லிட்டர், குடிநீர் தினந்தோறும் வீணாக்கப்படுகிறது. கோடையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும். எனவே, சிப்காட் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெ. கமலக்கண்ணன், ஒரகடம்.
பள்ளியில் திறக்கப்படாத கழிப்பறை
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 40 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கழிப்பறை கட்டப்பட்டு, மூன்று மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட 'மொபைல் டாய்லெட்' மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், மாணவியர் இயற்கை உபாதை கழிக்க மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், வகுப்பறையில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். போதுமான தண்ணீர் அருந்தாததால் பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், பெண்களுக்கான மாதாந்திர உபாதையின்போது மாணவியர் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
- கே.ரஜினிகாந்த்,
சின்ன காஞ்சிபுரம்.
சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் 3,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், இவ்வூரை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும், அவசர மருத்துவ சிகிச்சைக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூரில் உள்ள அரசு மருத்துவனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால், கர்ப்பிணியர், குழந்தைகள், முதியோர் அவசரத்திற்கு சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, திருப்புலிவனத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.
குடிநீர் தொட்டியை சுற்றி குப்பை
காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு முன்னதாக இருக்கும் குடிநீர் தொட்டியை சுற்றிலும், அங்கு வசிப்பவர்கள் குப்பை கொட்டுவதால் அவர்களுக்கே சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், கழிவுநீரும் ஆறு போல் ஓடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார பிரச்னை ஏற்படக்கூடாது என்பதால், மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ரேஷன் கடைக்கு செல்வோர் அன்றாடம் சிரமப்படுகின்றனர். இப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.சங்கர், காஞ்சிபுரம்.
